சென்னை: தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் தற்போது மீண்டும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு மத்திய பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதனால் இன்று கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நாளை முதல் 18ம்தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் மழையின்றி வறண்ட வானிலையே தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் ஏப்ரல் 16ம்தேதி வரை சற்று அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் கடலோர பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், அதிக ஈரப்பதம் காரணமாக மக்கள் சற்று அசவுகரியத்தை அனுபவிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர தமிழக பகுதிகள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக உணரப்படலாம்.
இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கவனமுடன் செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. எனவே அவர்கள் வழக்கம் போல் கடலுக்கு செல்லலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
