டெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலின்படி 12 மாநிலங்களில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இந்த நடைமுறை கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கேரளா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 ஒன்றிய பிரதேசங்களில் இந்த சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. இந்த 12 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றிய பிரதேசங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி கணக்கின்படி மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது பணிகள் முடிவடைந்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 44.92 கோடியாக குறைந்துள்ளது.
இதன் மூலம் மொத்தம் 6.08 கோடி போலி மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு பட்டியல் சரிபார்க்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இந்த சிறப்பு திருத்தப் பணிகளுக்கு மாறாக, கடந்த பிப்ரவரி 10ம் தேதி தனித்துவமான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடத்தி முடிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த பணிகளுக்கான கால அட்டவணையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டாலும், தற்போது 12 மாநிலங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை பல்வேறு அரசியல் சர்ச்சைகளையும் சட்டப் போராட்டங்களையும் சந்தித்தது.
குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனால் இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது. தற்போது 12 மாநிலங்களில் இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக 17 மாநிலங்கள் மற்றும் 5 ஒன்றிய பிரதேசங்களில் உள்ள 40 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள பகுதிகளில் இந்த ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு இந்த மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள்தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, உயிரிழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கி பட்டியலை முறைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் தேர்தல் முறைகேடுகள் தடுக்கப்பட்டு ஜனநாயக கடமை உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.
