×

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த ஒன்றிய அரசு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது: செல்வப்பெருந்தகை அறிக்கை

 

சென்னை: நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த ஒன்றிய அரசு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நெல் விவசாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதான வருமான ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டுமென கூறியிருப்பது விவசாயிகளின் உழைப்பை துச்சமாக மதிக்கும் செயலாக பார்க்கின்றேன். விவசாயிகள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு, மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க பார்த்தது. அதை எதிர்த்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 700 க்கும் மேற்பட்ட அப்பாவி விவசாயிகள் தன்னுயிரை இழந்த பிறகும் அதை விலக்கிக் கொள்ளாமல், அந்நேரத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல் மனதில் வைத்து, அந்த சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பின் வாங்கியது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, உடனடியாக இத்தகைய முயற்சிகளை கைவிட்டு, விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் ஊக்கத்தொகைகளை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, அவர்களுக்கு உறுதுணையாக நிற்பதே அரசின் கடமையாகும். விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை கூறிக்கொள்வதுடன், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Union government ,Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Tamil Nadu ,
× RELATED ஜனநாயகன் பட லீக்கிற்கு நாங்கள் காரணமல்ல: தணிக்கை வாரியம் விளக்கம்