×

வன்மத்துடன் எடப்பாடி பேசுகிறார்; சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பாரா பழனிசாமி?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; குகை கோயில்கள், கல்வெட்டுகள், தொல்லியல் சின்னங்கள் என தமிழ்நாட்டின் பண்பாட்டை சொல்லக் கூடிய ஊர்தான் புதுக்கோட்டை; புதுக்கோட்டைக்கு என்று பெரிய வரலாறு இருக்கிறது. மொழிப் போர் தியாகிகளைத் தந்த புதுக்கோட்டைக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். புதுக்கோட்டை திமுகவின் கோட்டை; பாஜக, அடிமை அதிமுகவை வேரோடு வீழ்த்த வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு எது தேவை மக்களாட்சியா? சர்வாதிகாரமா? மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பாஜகவினால் தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது. பாஜக-அதிமுகவை வேரோடு வீழ்த்த வேண்டும். பாஜகவையும் அவர்களை தூக்கி சுமக்கும் அதிமுகவையும் வேரோடு வேராக வீழ்த்த ஆதரவு கேட்டு வந்துள்ளேன். சட்டமன்ற தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல்; தமிழ்நாட்டுக்கு மக்களாட்சிதான் தேவை என்பதை ஏப்.23ம் தேதி ஒவ்வொருவரும் நிரூபிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்துள்ளோம். புதுக்கோட்டை மாவட்டத்தை புத்தம் புது கோட்டையாக மாற்றியுள்ளது திராவிட மாடல் அரசின் திட்டங்கள்; புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தியது என்றால் அது சாதனை திட்டமாகத்தான் இருக்கும். கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை போல, அரசியலில் யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை செய்துள்ளோம்.

தொடர்ந்து திராவிட மாடல் அரசுதான் ரெக்கார்ட் பிரேக் பண்ணப்போகிறது. நமது திட்டங்களை ஒன்றிய அரசே காப்பியடித்துக் கொண்டிருக்கிறது. நமது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது. திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் இந்தியாவுக்கே பெஞ்ச் மார்க்காக இருக்கிறது. மக்களுக்கு முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ஒரிஜினல்; குழந்தைகளின் பசியை போக்கவே காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தினோம். விடியல் பயணத் திட்டம் பெண்களின் பொருளாதாரத்துக்கான புரட்சித் திட்டம்; காலை உணவு திட்டத்தால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நான் முதல்வன் திட்டத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு நமது பிள்ளைகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்; நாம் கொண்டுவந்த தோழி விடுதி திட்டத்தை ஒன்றிய அரசே காப்பி அடித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி இடைநிற்றல் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல திட்டங்களை செயல்படுத்திய நான் கொரோனாவில் போய் இருக்க வேண்டும் என வன்மத்துடன் எடப்பாடி பேசுகிறார். திமுகவின் வாக்குறுதியான இல்லத்தரசி திட்டம், தேர்தல் களத்தில் சூப்பர் ஸ்டார்; முழுக்க முழுக்க பெண்களுக்காக கொண்டு வந்த திட்டம்தான் இல்லத்தரசி ரூ.8,000 கூப்பன் திட்டம்.

20 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500 உயர்த்தி வழங்கப்படும். புதுக்கோட்டையில் இயந்திர தயாரிப்பு குழுமம் உருவாக்கப்படும். பாஜக கிளைக் கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியுமா? எங்காவது சாதனைகள், கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதை பார்க்க முடியுமா? அவதூறுகளை பேசி தரமற்றவர் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்.டி.ஏ. எனும் பேரிடரை தமிழ்நாட்டுக்குள் பின்வாசல் வழியாக கொண்டு வர தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பழனிசாமி.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்யும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது அதிமுக; ஊழல்வாதிகளும் தேர்தல் துரோகிகளும் காவிக் கும்பலை தோளில் சுமந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என ராம்தாஸ் அத்வாலே பேசியதற்கு எடப்பாடி ஏதாவது சொன்னாரா?மும்மொழி கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் பேசியது பற்றி ஏதாவது கேட்டாரா எடப்பாடி ரூ.10,000 கோடி கொடுத்தாலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தி திணிப்புக்கு எதிராக அடிமை சாமி எடப்பாடி பழனிசாமி குரல் கொடுப்பாரா?

நம் குழந்தைகள் கல்வியை விட்டு வெளியேற வேண்டும், அறிவியல் பூர்வமாக யோசிக்கக் கூடாது என்று நினைக்கிறது. பாஜகவின் செயல் திட்டங்களுக்கு ஆமாம் சாமி போடும் முரட்டு அடிமைதான் எடப்பாடி பழனிசாமி; இருமொழிக் கொள்கைதான் இருக்கும் என்று மோடி, அமித் ஷா முன்னிலையில் எடப்பாடியால் பேச முடியுமா? அடுத்தடுத்த துரோகங்களுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர்தான் என்.டி.ஏ. கூட்டணி; நீட் விலக்கு தீர்மானத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளை மறைத்து வைத்தவர்தான் எடப்பாடி.

வக்ஃபு திருத்த சட்டத்தை ஆதரித்து சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பாஜகவின் பழக்கம், அதற்கு துணைபோவது அதிமுகவின் வழக்கம். டப்பா என்ஜின் கூட்டணி தமிழ்நாட்டுக்குள் வந்தால் மீண்டும் இருண்ட காலத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று கூறினார்.

Tags : Madapadi ,Palanisami ,M.U. K. Stalin ,Pudukkottai ,Chief Minister ,H.E. ,Dimuka ,Coalition ,K. Stalin ,Mu. K. Stalin ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டை திமுகவின் கோட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு