×

ஈத்தாமொழி அருகே தோஷம் கழிப்பதாக கூறி 15 பவுன் நகைகள் மோசடி மண்ணில் புதைப்பது போல் நடித்து கைவரிசை


ஈத்தாமொழி, பிப்.21 : குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள கல்லவீரியன்விளை பகுதியை சேர்ந்தவர்  ராதிகா (50). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி, களக்காடு அருகே  திருக்குறுங்குடியில் உள்ள அம்மன் கோயிலுக்கு ராதிகா  சென்றார். அப்போது  அங்கு நின்ற முருகன் என்பவர் ராதிகாவிடம், உன் குடும்பத்தில் நிம்மதி இல்லை. மன கஷ்டத்தில் இருக்கிறாய். உன் வீட்டில் தோஷம் உள்ளது. பரிகார பூஜை நடத்தி தோஷத்தை நீக்காவிட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும் என கூறி உள்ளார். ஏற்கனவே மன கவலையில் இருந்த ராதிகா, முருகன் கூறியதை கேட்டு தோஷம் கழிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இதையடுத்து அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ராதிகா ஊருக்கு புறப்பட்டார். அவருடன் முருகன், குமரி மாவட்டம் காட்டுப்புதூரை சேர்ந்த ஐயப்பன் ஆகியோரும் வந்தனர். முதலில் பொற்றையடி அருகே உள்ள அரசன்பதிக்கு வந்ததும் முருகனும், ஐயப்பனும் ஆட்டோவில் இருந்து இறங்கினர். சாமித்தோப்பு முட்டபதிக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரும்படி ராதிகாவிடம் கூறினர். இதையடுத்து ராதிகாவும், ஆட்டோவில் முட்டபதிக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் அரசன்பதிக்கு வந்து, முருகன், ஐயப்பனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்குள் முருகன் மட்டும் சென்று பார்த்து விட்டு, தோஷம் அதிகமாக உள்ளது. உனது உடலில் தோஷம் ஏறி விட்டது. எனவே நீ அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி வீட்டு முன் புதைத்து வைக்க வேண்டும். ஒரு நாள் நீ வெளியே வர கூடாது. பின்னர் யாருக்கும் தெரியாமல் புதைத்த நகையை எடுத்து அணிந்து கொள்ளலாம். அதற்குள் நான் பூஜை செய்து, ேதாஷத்தை நீக்கி விடுவேன் என்றார்.

இதை நம்பி ராதிகாவும் தான் அணிந்திருந்த 14 பவுன்  செயின், 1 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றி முருகனிடம் கொடுத்தார். முருகனும் வீட்டுக்கு வெளியே புதைத்து வைத்திருப்பதாக கூறி ஒரு இடத்தை காண்பித்தார். பின்னர் கிளம்பி சென்று விட்டார்.  வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கூறியதால், ஒருநாள் முழுவதும் ராதிகா வெளியே வர வில்லை. பின்னர் திடீரென சந்தேகம் அடைந்து, மறுநாள் நகை புதைத்து வைத்ததாக கூறப்பட்ட இடத்தில் தோண்டி பார்த்த போது நகைகள் இல்லை. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. பின்னர் மீண்டும் திருக்குறுங்குடி சென்று கோயில் நிர்வாகிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது தான்  பரிகார பூஜை நடத்துவதாக கூறி 15 பவுன் நகைகளை முருகன் மோசடி செய்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் முருகன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Ithamozhi ,
× RELATED ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம்