சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கி கடந்த 6ம் தேதி வரை நடைபெற்றது. 4 நாட்கள் விடுமுறையான நிலையில் 4 நாட்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளாகும். முதல் நாளான மார்ச் 30ம் தேதி 573 வேட்புமனுக்களும், 2ம் நாளான கடந்த 2ம் தேதி 1,361 வேட்புமனுக்களும், 3ம் நாளான 4ம் தேதி 3,430 வேட்புமனுக்களும், கடைசி நாளான 6ம்தேதி 7,599 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7-ந்தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இந்த பரிசீலனைக்கு பிறகுதான் எத்தனை வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை, எத்தனை வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் தெரியவந்தது. அதன்படி, 7,599 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு 5,024 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 108 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இறுதி பட்டியல் தயார் செய்து இன்று மாலை அறிவிக்கப்படும்.
அதேநேரம், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம், பெயர் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (பேலட் பேப்பர்) அச்சிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு தொகுதியில் 16 பேருக்கு மேல் போட்டியிட்டால் இரண்டு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். அதன்படி கூடுதலாக ஒவ்வொரு 16 வேட்பாளருக்கும் கூடுதல் எந்திரம் பயன்படுத்தப்படும். இறுதியில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) இடம் பெற்றிருக்கும்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில், அதிக தொகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. மேலும், ஒரு சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் மாயம், புதியவர்களை வேட்பாளராக நியமித்தது என்று பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளிலும் யார், யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்ற விபரமும் தெரியவரும்.
