×

நம்மை ஆளும் ஆண்டாள்

பகுதி 1

அன்று கோகுலாஷ்டமி. கண்ணன் அவதரித்த நாள் என்பது ஒரு புறம், தன் தந்தை சொல்லப்போகும் கண்ணன் பிறந்த கதையைக் கேட்கும் ஆவல் மறுபுறம். மாக்கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி, நறுமண தூபங்கள் ஏற்றி கோதை பரபரப்பாக இருந்தாள். கண்ணனின் வலது காலில் சங்கு முத்திரையும், இடது காலில் சக்கர முத்திரையும் இருக்குமாம். தன் தந்தை பெரியாழ்வார் சொன்னது நினைவுக்கு வர, சின்னச் சின்ன கால்தடங்கள் மாக்கோலமாய் இட்டாள். தோழி சுதாமயியும் கோதையின் உடனிருந்து உதவி செய்த வண்ணம் இருந்தாள்.

தினமும் பெரியாழ்வார் கோதைக்குக் காலையில் பாசுரங்களைச் சொல்லிப் பொருள் விளக்குவார். இரவு வீட்டின் முற்றத்தில், கோதைக்கு கண்ணனின் ஆயர்பாடி நாட்களை விவரிப்பார். கோதைக்கு, கண்ணன் மற்றும் கண்ணன் சேர்ந்த நிகழ்வுகள் மனதில் காட்சிகளாய் பதிந்திருக்கும். கோதைக்கு கண்ணன் மீது பக்தி, விருட்சமாய் மனதில் வளர, தந்தையும், தாயும், ஒட்டுமொத்த ஊரும் காரணமானது. கோகுலாஷ்டமி இரவு என்பதனால் கோதை மிகவும் உற்சாகமாக இருந்தாள். கதைநேரம் துவங்கியது.

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர்தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே

பெரியாழ்வார், பிள்ளைத்தமிழில் தான் இயற்றிய முதல் பாசுரத்துடன் துவங்கினார்.‘கோதை! நம் கண்ணன், அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் பிறந்தான். மதுராவில் பிறந்ததாகச் சொல்பவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். ப்ரபஞ்சத்திலேயே பாற்கடலுக்கு நிகரானதும், அந்தக் கேசவனுக்கே மிகவும் பிடித்த ஊர் திருக்கோட்டியூர்தான்.’
‘அப்பா! கண்ணன் என்று மட்டும் சொல்லாமல் கேசவன், நம்பியென்று சொல்லியுள்ளீர்களே?’

‘எனக்கு அவனின் எல்லா நாமங்களையும் சொல்லத்தான் ஆசை. எல்லா வைணவர்களும் முதலில் சொல்லும் அவன் திருநாமம் ‘கேசவன்’. அதனால் அந்த நாமத்தையும், எனக்கு அவனை ‘நம்பி’ என்று அழைக்க அவ்வளவு பிடிக்கும்.’

‘நம்பி! நம்பி! ‘ என்று கோதை சப்தமாகச் சொல்லிப்பார்த்தாள். ‘எனக்கு வாய் மட்டுமல்ல, என் மனம், புத்தி, உடம்பு என எல்லாமுமே தித்திக்கிறது.’
கண்கள் விரித்து கோதை சொல்வதைக் கேட்டு, பெரியாழ்வாருக்கு கண்ணீர் தளும்பியது.

தழுதழுக்கும் குரலில் தொடர்ந்தார்.‘கண்ணன் திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்தான். அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால், ஆயர்கள் ஒருவர் மீது ஒருவர் நறுமண எண்ணெயைப் பூசினார்கள். நறுமணப் பொடிகளைத் எதிரெதிர் தூவிக்கொண்டார்கள். வீட்டு முற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.சொல்லி முடிக்கையில், கோதை அருகேயிருந்த வண்ணப் பொடிகளை பெரியாழ்வாரின் முகத்தில் பூச, கோதையின் முகத்தில் அவளின் தாயார் பூச, அவர்களுடன் அண்டை வீட்டார்களும், தோழிகளும் ஒன்று சேர்ந்து கொள்ள , அவர்களின் வீட்டு முற்றமும் சேறானது.

கோதை, ‘இனி ஸ்ரீவில்லிப்புத்தூர்தான் ஆயர்பாடி. இந்த முற்றம்தான் நம் கண்ணன் பிறந்த இடம்’ எனக் கூறியதைக் கேட்டு எல்லோரும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
கோதை அந்த முற்றத்தை நமஸ்கரித்தாள். வரைந்த கண்ணனின் காலடிகளுக்கு, மண்டியிட்டு அமர்ந்து, குனிந்து முத்தமிட்டாள்.ஒவ்வொரு நாளும் அந்த முற்றத்தில், பெரியாழ்வார், தம் திருமொழி பாசுரங்களிலிருந்து கதையாய் சொல்லச்சொல்ல, கண்ணன், கோதை மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான்.

வாயுள் வையகம் கண்ட மட நல்லார், ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம், பாய சீருடைப் பண்புடைப் பாலகன், மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.
அடுத்த பாசுரத்தின் பொருளாக, கண்ணன், வாயில் எல்லா உலகங்களையும் காட்டியதை பெரியாழ்வார் நடித்துக் காட்டினார். யசோதை அடைந்ததைவிட, கோதை ஆச்சர்யம் அடைந்தாள்.
கண்ணன் பரம புருஷன், மாயன், நந்தகோபரின் மகன். ஆனால், எனக்கு அவன் என்றும் குழந்தைதான் என்றார் பெரியாழ்வார்.

வேறொரு நாள், வேறொரு பாசுரம்.
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறி,
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்,
மெத்தத் திரு வயிறார விழுங்கிய,
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.

கண்ணன், கீழ் பாகம் பொத்தலான உரலைக் கவிழ்த்தான். அவ்வுரலின் மேல் ஏறி நின்று, உறியின் மேல் வைத்த பானையில் கையை விட்டான். சேமித்து வைத்த மதுரமான திரட்டுப் பாலையும், நவநீதத்தையும் எடுத்தான். அள்ளியள்ளிப் புசித்தான். வாயில் ஒழுகிய வெண்ணெய், ஒட்டியிருந்த திரட்டுப்பால் கைகளுடன், முதுகுப்பக்கமாக யசோதையைக் கட்டிக்கொண்டான்.

இதைக் கேட்ட மாத்திரத்தில், கோதைக்கு தன் முதுகைக் கண்ணன் கட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தாள். அவளையும் அறியாமல், முதல் முறை நாணம் கொண்டாள். மற்றொரு நாள்,பொன் போல் மஞ்சனமாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால், வன்பாரச் சகடம் இறச்சாடி வடக்கிலகம் புக்கிருந்து, மின்போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த, அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.யசோதை கூறுவதுபோல அமைந்த பாசுரம்.

‘பொன் போல, திருமஞ்சனம் செய்து அமுது செய்வித்து யமுனைக்கு நீராடப் போனேன். நான் வருவதற்கு முன்னே, குழந்தைகள் அழுவதைப்போலே காலைத் தூக்கி உதைத்து, வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்; அன்றியும், அந்த இளம் பருவத்திலேயே வடக்கில் இருந்த வீட்டில் உள்ள ஒரு கன்னியை உருவம் மாறும் படிச் செய்தாய். இப்படி மனிதரால் செய்ய முடியாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று உன்னைத் தெரிந்து கொண்டேன்.’

பெரியாழ்வார் பாசுரத்தின் பொருள் உரைக்க, கோதை, ‘ யசோதை மாமியே! எனக்கும் புரிந்துவிட்டது. என் கண்ணன் கடவுள்தான்’ என்று மனசுக்குள் யசோதையிடம் பேசித் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.மேலும் ஒரு பாசுரம், வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து தோளாலிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய், கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன், உன்னை அறிந்து கொண்டேன்.

பெரியாழ்வார் பொருள் சொல்லும் முன்பே மனதில் ‘கண்ணா! அயல் பெண்களை உன் அழகாலே மயக்கினாயா? தோளாலே அணைத்துக் கொண்டாயாமே? அப்பெண்களோடு வாயால் சொல்ல ஒண்ணாத தீம்புகளை நீ செய்தாய் என்கிறார்களே? எல்லாமும் பொய்யாகவே போய்விடாதா!’ எனச் செல்லக் கோபம் கொண்டாள்.கோதைக்கு பெரியாழ்வாரின், எம்பிரான் மீதான அக்கறையையும், ஏதாவது துன்பம் நேர்ந்துவிடப் போகிறதே என அஞ்சுகிற அந்தப் பூஞ்சை மனதையும் எண்ணி, நெகிழ்ந்து போவாள்.

பெரியாழ்வாரின் பாசுரம்:உறகல் உறகல் உறகல் ஒண்சுடர் ஆழியே சங்கே, அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே, இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள், பறவை யரையா உறகல் பள்ளியறைக் குறிக் கொண்மின்.ஆழியை, சங்கை, வாளினை, சாரங்கம் எனும் வில்லை, கதாயுதத்தை மற்றும் காவல் காப்பவர்களை உறங்கிவிடாமல் காக்க இறைஞ்சுவதைப் பார்க்கையில் கோதைக்கு கண்ணில் நீர் கசியும்.அவன் இறைவன். உலகையே காப்பவன் ஆனாலும் தனக்குக் குழந்தைதான் என்கிற அவரின் பாசம் புரிய மனம் விம்மும்.

தன் தந்தைக்கு உள்ள அந்த பக்தி, தனக்கும் வரவேண்டும் என்று கோதை ப்ரார்த்தித்தாள். இப்படியொரு சூழலில் வளரும் கோதைக்கு அப்படியொரு பக்தி வந்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கக்கூடும்!பக்தியுடன் கோதைக்குக் கண்ணன் மீது ப்ரேமையும் வந்ததை அவள் உணரும் முன்பே அவள் தோழியர் உணர்ந்தனர். கோதைக்கு பால் கசந்தது. பஞ்சணை நொந்தது. நிலைக் குத்திய பார்வை. தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் இயல்பு. காதல் வயப்பட்டிருப்போருக்கு வரவேண்டிய அத்தனையும் கோதைக்கும் வந்து சேர்ந்தது.

பெரியாழ்வாருக்கு, கோதை சிறுமியாக இருந்தவரையில் கண்ணனை நினைத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. காதல் வயப்பட்ட ஒரு மகளைக் கையாள்வதில் அவர் தடுமாறித்தான் போனார்.குடும்பத்தில் ஒரு சிறிய சலனம் வருகையில், அன்னியரின் தலையீடு வரத்தான் செய்யும். நலம் விரும்பிகள் எனும் போர்வையில் ஆளுக்கொரு யோசனையை அள்ளித் தெளித்தார்கள். அதில் ஒன்று மந்திரவாதியை அழைத்து, கோதையிடம் குடிகொண்டுள்ள பேயை விரட்டுவது என்பது.

வேப்பிலை, உடுக்கை சகிதம் வந்தவர் கோதையை ஆராய்ச்சி செய்வது போல மேலும், கீழும் பார்த்தார். ‘இந்தப் பெண்ணின் மீது கருப்பண்ண சாமி பிடித்திருக்கிறது. அதை … அவர் முடிக்கும் முன்பே, கோதை ‘ பாதி சரி. கருப்பு வண்ண சாமிதான் எனக்குப் பிடித்திருக்கிறது. அந்தச் சாமிக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? அதை மட்டும் கேட்டுச் சொன்னால் புண்ணியமாய் போகும்.’ தனக்குள் பேசினாள்.

தோழிகள் கோதையைப் பார்த்து வேடிக்கை முகம் காட்டினார்கள்.அந்தப் படலம் முடிந்ததும். பின் நாடி வைத்தியர் ஒருவர் வரவழைக்கப் பட்டார்.அவர் வந்ததும் கோதையைப் பார்த்து, ‘நாடி பார்க்கக் கையைக் கொடு’ என்று சொல்ல,‘நான் நாடியிருப்பவர் கைகளைப் பற்ற ஒரு வழி சொல்லுங்கள். என் நாடி, நரம்பெல்லாம் கலந்தவன் அந்த கண்ணன்!’ என்பது போல அவரைப் பார்த்தாள். இப்படியே நாட்கள் ஓடிற்று.

ஒரு நாள், பெரியாழ்வார் கோதையை அருகில் அழைத்தார். ‘நீ குமரியாகிவிட்டாய். ஆனால் எனக்கு என்றுமே நீ குழந்தைதான். எல்லா தந்தைகளுக்கும் மகள் உயிர். நீ, என் உயிருக்கும் மேலானவள். எனக்கு அந்த கண்ணனும் நீயும் ஒன்று! உனக்கு அந்தக் கண்ணன் ஒரு நல்வழி காட்டுவான்.’

கண்களில் நீர் கசிய, கோதை, அவர் பாதங்கள் பணிந்து ஆசிபெற்றாள்.‘நாளை மார்கழி மாதத்தின் முதல் நாள். பாவை நோன்பு துவங்குகிறேன். ஸ்ரீவில்லிபுத்தூரே திருவாய்பாடியாகும். என் தோழிகளை இடைபெண்களாகவும், நானும் அவர்களிலே ஒருத்தியாகவும் எண்ணுவேன். வடபெரும்கோவிலையே நந்தகோபர் திருமாளிகையாகவும், உள்ளே நிற்கிறவனை கிருஷ்ணனாகவும் நினைத்துக் கொள்வேன்.

பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஓதோம்.

தாங்கள் ஆசி கூறுங்கள். எல்லாமும் நலமாகட்டும்!’கோதை பாவை நோன்பினைத் துவங்கினாள். ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரம் புனைந்தாள். முப்பது பாசுரங்களுடன் திருப்பாவை உண்டானது. கோதை, முழுமையான இடைச்சியாகவே மாறித்தான் போனாள். கோதையை, அவளின் தோழிகள், ‘உனக்கு, இடை உடை, இடை நடை, இடை முடை வந்துவிட்டது!’ என்று கேலி பேசினார்கள்.

கோதண்டராமன்

Tags : Kokulashtami ,Kothai ,Mavila ,
× RELATED காரியங்கள் தேங்காமல் நடைபெற தேங்காய் பரிகாரங்கள்