- வில்லியனூர்
- அனுமன்
- இறைவன்
- ஸ்ரீ வைசராஜர்
- புதுச்சேரி
- ஸ்ரீ
- நிவாசப்பெருமாள் கோயில்
- வில்யனூர்
- வில்லியனூர்
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் என்னும் பகுதியில் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருப்பதை கேள்விப்பட்டு வில்லியனூருக்கு சென்றோம்.
“ஐயா.. நாங்கள் வில்லியனூர் ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும். எப்படி செல்வது?’’ என்று பேருந்து நடத்துனரிடம் கேட்டோம்.
“வில்லியனூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் போதும், நடந்து செல்லும் தூரம்தான்’’ என்கிறார். வில்லியனூர் பேருந்து நிறுத்தமும் வந்தது. நாங்கள் அங்கு இறங்கி, ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயிலுக்கு செல்ல வழி கேட்டோம்.
“இதோ… தெரியுது பாருங்க.. அதுதான் கோயில்’’ என்று ஒருவர் வழிசொன்னார். அங்கு சென்று பார்த்தால், “ ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்’’ என்று எழுதப்பட்டிருந்தது. நாம் தேடி வந்த கோயில் ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயில் அல்லவா! என்று சந்தேகத்தோடு கோயிலின் உள்ளே நுழைந்தோம். சந்தேகித்தது சரியாக இருந்தது. வரதராஜப்பெருமாள் கோயிலுக்குள் சென்றதும் ஆஞ்சநேயரை கண்டோம். அனுமனின் தலைக்கு மேல் வால் இல்லை, சிறிய மணி இல்லை, அனுமனின் திருமுகம் நேராக இருந்தது இப்படி மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்ததற்கான ஒரு அங்குல அடையாளங்கள்கூட இல்லை. ஆகையால், அங்கு இருக்கக்கூடிய கோயில் நிர்வாகியிடம் கேட்டோம்.
“புதுச்சேரியை பொறுத்தவரையில் இங்கு வரதராஜப்பெருமாள் கோயில்தான் அதிகம். அதுவும் வில்லியனூரில் ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயில் என்பது எனக்கு தெரிந்தவரையில் இல்லை’’ என்று கோயில் நிர்வாகி தெரிவித்தார்.
“ஒன்று செய்யுங்கள்…. இங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அம்மன் கோயில் உள்ளது. அதன் அருகில் பழமையான வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. அங்கு சென்று பாருங்கள்’’ என்று அவரே ஆட்டோவில் வழியனுப்பினார். அவர் சொன்ன வரதராஜப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இங்கும் அனுமன் இல்லை. அங்கு ஸ்ரீ னிவாசன் என்பவர் பட்டாச்சாரியாக இருக்கிறார். அவரிடத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை தேடிவந்திருக்கிறோம். என்று விவரத்தை கூறினோம்.
“நான் சிறுவயது முதல் இக்கோயிலில் பூஜை செய்து வருகிறேன். அப்படி அனுமன் ஏதும் இல்லை. இக்கோயிலில், இரு கைகளை கூப்பியபடி, ராமரை சேவித்து ஒரு அனுமன் இருக்கிறார். அவரை சமீபத்தில்தான் பிரதிஷ்டை செய்தோம்’’ என்று பொறுமையாக பதில் கூறினார். அவரின் உபசரிப்பும், பேச்சும் எங்களை வெகுவாக கவர்ந்தது.
“அந்த ஸ்ரீ னிவாசனைத்தான் பார்க்க முடியவில்லை. இந்த பட்டாச்சாரி ஸ்ரீ னிவாசனின் நட்பு கிடைத்தது’’ என்கின்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை தேடிவந்தோம். அவரின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லையே..?
என்கின்ற ஏக்கம் மறுபுறம். செய்வது அறியாது கோயிலின் வெளியே வந்து யோசித்த போது, கைபேசியில் மேப் போட்டு பார்க்கலாம் என்று தோன்றியது. வில்லியனூர் ஸ்ரீ னிவாசப்பெருமாள் என்று டைப் செய்தோம். மேப் ஒரு வழி காட்டியது. மேப்பை நம்பி செல்லலாமா… வேண்டாமா.. என்று மனதிற்குள் சில யோசனை எழுந்தது. சரி.. கடைசி முயற்சியாக மேப் வழிகாட்டும் இடத்திற்கு செல்வோம் என்று முடிவு செய்து, அதன்படி பயணித்தோம்.
காசி விஸ்வநாதர்
வில்லியனூரில் இருந்து கீழ் அக்ரஹாரத்திற்கு செல்ல, சில பேருந்துகள் சென்றாலும் ஆட்டோவில் செல்வது சற்று எளிமையாக இருக்கும் என்று முடிவு எடுத்து ஆட்டோவில் பயணித்தோம். வில்லியனூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம்தான், இக்கோயிலுக்கு செல்ல!
கீழ் அக்ரஹாரத்திற்கு செல்லும் வழியில், ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில், காசிக்கு நிகரான கோயிலாக கருதப்படுகிறது. நேரம் இருந்தால் இக்கோயிலையும் தரிசிக்கலாம். அதன் பிறகு, சங்கராபரணி ஆற்றைக் கடந்து சென்று கீழ் அக்ரஹாரத்தை அடைந்தோம்.
கீழ் அக்ரஹாரம் பகுதி மிகவும் அமைதியோடு, காணப்பட்டது. முன்னொரு காலத்தில் அதிகளவில் அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது யாரும் இல்லை என்கின்ற தகவல்களை ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.
ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயிலை தேடினோம். கீழ் அக்ரஹாரம் தொடங்கும் பகுதியில், “ ஸ்ரீ ஸ்ரீ னிவாசப் பெருமாள் கோயில்\” என்று எழுதி இருந்தது. மேலும், சுமார் 12 அடி உயரத்தில் அனுமனின் வண்ணமயமிக்க சிற்பம் ஒன்றும் தென்பட்டது. இதனை கண்டதும் மகிழ்ந்தோம். ஆனால், இக்கோயிலை கண்டுபிடித்து செல்ல பிற்பகல் ஆனதால் கோயில் பூட்டியிருந்தது. கோயில் அருகில் இருக்கும் ஒரு வீட்டில், கோயிலை பற்றி விசாரித்தோம். இங்கிருந்து மூன்றாவது வீட்டில் மணிகண்டன் என்பவரது வீட்டில் கோயிலின் சாவி இருக்கிறது என்று தகவல் கொடுத்தார்.
இரண்டு சிலைகள்
உடனே நாம் மணிகண்டன் வீட்டை தேடி சென்றோம். மணிகண்டனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இக்கோயிலில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டோம்.
“எங்கள் தாத்தாவின் அப்பா தலைமுறையில் இருந்து இந்த ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயிலை நாங்கள் பராமரித்து வருகிறோம். எங்களுக்கு நினைவு தெரிந்து அப்படி எதுவும் இல்லை’’ என்று மறுத்துவிட்டார். எங்களின் முகம் வாடியது. எங்கு தேடியும் அனுமனை காணமுடியவில்லையே என்கின்ற வருத்தம் முகத்தில் தெரிந்தது. சிறிது நேரத்திற்கு பின்…
“வில்லியனூரில் இந்த கோயில் மட்டும்தான் ஸ்ரீ னிவாசப்பெருமாள் கோயில், வேறு எங்கும் இல்லை… நீங்கள் சொல்வது இந்த கோயில்தான்…’’ என்று யோசித்த அவர்;
“ஆமாம்… கோயிலின் உள்ளே சிதைந்த நிலையில் இரண்டு சிலைகள் இருக்கின்றன. அதுவாக இருக்கலாம்’’ என்று கூறிய மணிகண்டன்; கோயிலின் சாவியை எடுத்துவர வீட்டிற்குள் சென்றார். அந்த சிதைந்த இரண்டு சிலைகளுள், ஒரு சிலை நிச்சயம் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற நம்பிக்கை நம் மனதிற்குள் பிறந்தது. கோயிலுக்குள் சென்றோம். சிதைந்த நிலையில் இருக்கும் இரண்டு சிலைகளை மணிகண்டன் காட்டினார். ஒரு சிலை, விஷ்ணு பகவானின் தோற்றம் போல் காணப்பட்டது. இன்னொரு சிலை, அடையாளமே தெரியாமல் சிதைந்து கீழே படுக்க வைக்கப்பட்டிருந்தது. சிலையின் தலைப்பகுதியே காணாத அளவிற்கு சிலை சிதைந்து காணப்பட்டது. நன்கு உற்றுப்பார்த்தால், அனுமனின் வால் பகுதி தலைக்கு மேலே இருப்பதை பார்க்க முடிந்தது.
முன்னோர்களின் வாக்கு
இதனை கண்டதும் நம் உடல், சிலிர்த்து விட்டது. மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்ததற்கான அங்கு அடையாளங்கள் சில தென்பட்டன. இதனை மணிகண்டனிடத்தில் தெரிவித்தோம்.
“ஆமாம்… எங்கள் முன்னோர்கள், கீழே இருக்கும் சிலை அனுமன் என்றும், மேலே இருக்கும் சிலை ஸ்ரீ னிவாசப்பெருமாள் என்று கூறியிருக்கிறார்கள்’’ என்று நினைவுபடுத்தி நம்மிடம் ஆச்சரியத்தோடு தெரிவித்தார். இதனை கேட்ட நாமும் ஆச்சரியமடைந்தோம்! மேலும் சில தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார், மணிகண்டன். அவர் கூறியதாவது;
“முன்னொரு காலத்தில், நிகழ்ந்த படையெடுப்பின் போது, இந்த இரண்டு சிலைகளும் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ னிவாசப்பெருமாளின் மூக்கு மற்றும் கீழ் பகுதிகள், அனுமனின் முகம் பகுதி என மிக கடுமையாக சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம் எங்கள் முன்னோர்களுக்கு தெரியவில்லை. சிதைந்த நிலையில் ஏதோ இரண்டு சிலைகள் இருக்கின்றன என்று அதனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர், பிரசன்னம் போடப்பட்டு, இந்த சிலைகளை பற்றி கேட்டிருக்கிறார்கள்.
அப்போதுதான், சிதைந்த இரண்டு சிலைகளில், ஒருவர் ஸ்ரீ னிவாசப்பெருமாள் மற்றொருவர் அனுமன் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், சிதைந்த சிலைகளை கோயிலில் வைத்திருக்க கூடாது என்றும் அதனை கடலில் போட்டுவிடுங்கள் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், கடலில் போட மனமில்லாத எங்களின் முன்னோர்கள், இந்த சிலைகளுக்கு அருகிலேயே இன்னொரு ஸ்ரீ னிவாசப்பெருமாள் சந்நதியை எழுப்ப முடிவு செய்து, தற்போது ஸ்ரீ னிவாசப்பெருமாள் சந்நதியை புதியதாக கட்டிமுடித்துள்ளனர். இப்போது, இந்த சிதைந்த அனுமனை தேடி நீங்கள் வந்துள்ளீர்கள். மகான் ஸ்ரீ வியாசராஜர் இந்த சிதைந்த அனுமனை பிரதிஷ்டை செய்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம், இங்கு விஜயநகர பேரரசர்கள் பலரும் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த பேரரசர்களின் ராஜகுரு வியாசராஜர். ஆகையால், இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது’’ என்று சொல்லி முடித்தார் மணிகண்டன்.
நமக்கும் மணிகண்டன் கூறுவது சரியே என்று தோன்றியது. மேலும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த பெரும்பாலான அனுமன்கள் ஆற்றங்கரையை ஒட்டியே காணப்படும். இக்கோயில் அருகிலும் சங்கராபரணி ஆறு ஓடுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, 90% மகான் ஸ்ரீ வியாசராஜர்தான் இந்த சிதைந்த அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்று தோன்றியது!
சிலைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு, தற்போதுள்ள ஸ்ரீ னிவாசப்பெருமாளையும் தரிசித்தோம். திரும்பத்திரும்ப சிதைந்த சிலைகளையே பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பழமையை நம்மால் நன்கு உணரமுடிந்தது. அப்படியே.. கோயிலை வலம் வந்தால், இன்னொரு சிறிய பால அனுமன் காட்சியளிக்கிறார். யாரேனும் தொல்லியல் துறையினர், இந்த தொகுப்பை படித்தால், இக்கோயிலைப் பற்றி தெளிவுப்படுத்த வேண்டுகிறோம்.
விழா
புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி.
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 10 முதல் 12 வரை மாலை 5 முதல் 7:30 வரை.
அமைவிடம்
புதுசேரியில் இருந்து சுமார் 8 கி.மீ., பயணித்தால் வில்லியனூரை அடைந்துவிடலாம். அங்கிருந்து 3 கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடைந்துவிடலாம். தொடர்புக்கு: 96555 87151.
குறிப்பு
வில்லியனூர் பகுதியே கோயில் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது. மிக முக்கியமாக ஸ்ரீ திருக்காமேஸ்வரர் கோயில், மிகவும் பிரசித்தம். மேலும், இவ்வூரைச் சுற்றி வரதராஜஸ்வாமி கோயில்கள் பல இருக்கின்றன. ஆகையால், முதலில் வில்லியனூர் பகுதியில் உள்ள கோயில்களை தரிசித்த பின்பு, கீழ் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ நிவாசப் பெருமாள் கோயிலுக்கு செல்லலாம்.
