×

லெபனானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஒரே நாளில் 254 பேர் உயிரிழப்பு

லெபனான்: லெபானானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் நேற்று மட்டும் 254 பேர் உயிரிழந்தாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் தங்களுக்கு பொருந்தாது எனக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக 2 வார காலம் தாக்குதல்களை நிறுத்துவது என்ற டிரம்ப் அரசின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இந்த மிக மோசமான தாக்குதலில் நேற்று ஒருநாள் மட்டும் 254 பேர் கொல்லப்பட்டு, 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனோர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

லெபனான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட மிக பெரிய தாக்குதலில் ஒன்றாக இது இருக்கிறது. பெரும்பாலான வான்வழித் தாக்குதல்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நடந்துள்ளது. இது பெரும் சேதத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தின. பல இடங்களில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றிக் காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அவூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Israel ,Lebanon ,Lebanese government ,Iran ,US ,United States ,
× RELATED லெபனானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஒரே நாளில் 254 பேர் உயிரிழப்பு