×

சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக தின விழா இலக்குகளை திட்டமிட்டு இறுதி செய்து பணியாற்றினால் வெற்றி பெறலாம்: இந்தியன் வங்கி செயல் அலுவலர் பினோத் குமார் பேச்சு

சென்னை: விஐடி சென்னை பல்கலைக்கழக தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் தலைமை செயல் அலுவலர் பினோத் குமார் பங்கேற்றார். அவர் பேசும்போது, `உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நாமும் நம் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், இனிவரும் காலங்களில் ஏராளமான வாய்ப்புகள் உருவாக உள்ளன.

அந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்குகளை பெரிதாக வைக்க வேண்டும். இலக்குகளை இறுதி செய்து திட்டமிட்டு பணியாற்றினால் வாழ்வில் சுலபமாக வெற்றி பெறலாம்’ என்றார். விழாவில் விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், `கல்வி தான் உண்மையான செல்வம். யாரிடம் கல்வி இருக்கிறதோ, அந்த குடும்பம் உயரும், அந்த சமூகம் உயரும், அந்த மாநிலம் உயரும், நாடும் உயரும். நாம் முன்னேறிய தேசமாக இருக்க விரும்புகிறோம்.

அது கல்வி இல்லாமல் சாத்தியமில்லை. கல்வியிலும் நாம் சிறந்து விளங்கினால்தான் பொருளாதார ரீதியாக வளர்ந்த பிற நாடுகளுடன் போட்டியிட முடியும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் வளர்ந்த நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலும் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளது. இதுவே, இந்தியாவின் சராசரி 28 சதவீதமாக உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நம்முடைய சராசரி அளவில் தான் இருந்தது. ஆனால், தற்போது சீனா முன்னணியில் சென்றுவிட்டது. சீனாவில் தனி நபர் வருமானம் 14 ஆயிரம் டாலராக உள்ளது.

அதுவே இந்தியாவில் 3000 டாலராக உள்ளது. இதற்கு காரணம் நாம் கல்வியில் கவனம் செலுத்தாததுதான். நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாம் 4 சதவீத அளவைக் கூட எட்டியதில்லை. இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், கல்விக்காக வெறும் 2.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் உயர்கல்விக்காக இந்தியா 12 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

சீனா 800 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் அரசுகள் கல்விக்கு அதிக நிதியை செலவிட வேண்டும்’ என்றார். இதை தொடர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், 100 சதவீதம் வருகைப்பதிவேடு கொண்ட மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி விருந்தினர்கள் கவுரவித்தனர். விழாவில் விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் தியாகராஜன், விஐடி சென்னை பல்கலைக்கழக இயக்குநர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் பேராசிரியர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Chennai VIT University Day Celebration ,Indian Bank ,Executive Officer ,Binod Kumar ,Chennai ,VIT ,Chennai University Day Celebration ,Chancellor ,Go. Viswanathan ,Vice President ,G.V. Selvam ,Chief Executive Officer ,Binod… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து