- மு.கே ஸ்டாலின்
- எடப்பாடி
- சீமான்
- விஜய்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எடப்பாடி பழனிசாமி
- விஜய் சீமன்
- கொளத்தூர்
சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. அதன்படி, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. நாளை மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியாகும்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொது தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4ம் தேதி நடக்கிறது. முன்னதாக, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கடந்த மாதம் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி (நேற்று முன்தினம்) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, முதல்நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் திருச்சி கிழக்கில் விஜய் கடந்த 4ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
இறுதிநாளான நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாஜ சார்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இறுதியாக மொத்தம் 7,600 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் ஆண்கள் 6,217 பேர், பெண்கள் 1,380 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் அடங்கும்.
நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், நேற்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனை நடந்தது. வேட்புமனு பரிசீலனை நடந்து முடிந்து, ஏற்கப்பட்டவர்கள் பெயர் விவரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அதேபோன்று, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு உள்ளிட்ட திமுக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி வேட்புமனு ஏற்கப்பட்டது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த தவெக தலைவர் விஜய் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பெரம்பூரில் விஜய்யின் மனுவை ஏற்கக் கூடாது என்று பாமக மற்றும் சில சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பையும் மீறி விஜய் மனு ஏற்கப்பட்டது.
காரைக்குடி தொகுதியில் சீமான், பெரும்புதூரில் செல்வப்பெருந்தகை மனு ஏற்கப்பட்டன. போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதேபோன்று காங்கிரஸ், பாஜ, தேமுதிக, மதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது. சில தொகுதிகளில் முக்கிய பிரமுகர்களின் வேட்புமனுக்கள் மீது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நீண்ட பரிசீலனைக்கு பிறகு அவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோன்று பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிக்கப்பட்டது. இறுதியாக தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் நேற்று இரவு 10 மணி வரை 4,800 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2260 மனுக்கள்ெ நிராகரிக்கப்பட்டன. 234 தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற முழுமையான தகவல் இன்றுதான் வெளியாக வாய்ப்புள்ளது.
இதையடுத்து 9ம் தேதி (நாளை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். நாளை மாலை 3 மணிக்குள் வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இறுதியாக எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற தகவலை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அப்போதே, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்படும். இந்த நிலையில், வாக்காளர் இறுதி பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு தாக்கல் செய்து இருந்தனர். அதன்படி வாக்காளர் துணைப் பட்டியல் நேற்று முன்தினம் இறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அச்சிடப்பட இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துணைப் பட்டியல் இணைந்த வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாகும்.
