- முதல்வர்
- மு.கே ஸ்டாலின்
- எடப்பாடி
- விஜய்
- சீமான்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கொளத்தூர்
- எடப்பாடி பழனிசாமி
- பெரம்பூர்
- காரைக்குடி
சென்னை:தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, பெரம்பூர் தொகுதியில் விஜய், காரைக்குடி தொகுதியில் சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கடந்த மாதம் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி (நேற்று) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, முதல்நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இறுதிநாளான நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடைப்பாடி தொகுதியிலும், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாஜக சார்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் வேட்பு மனு செய்தனர். நேற்று, மனு தாக்கல் செய்ய இறுதிநாள் என்பதால் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதிநாளான நேற்று வரை மொத்தம் 7,600 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் ஆண்கள் 6,217 பேர், பெண்கள் 1,380 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் அடங்கும்.
நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது. சில தொகுதிகளில் அதிக வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இருந்ததால், இன்றே பரிசீலனையை செய்துவிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. வேட்புமனு பரிசீலனைக்காக கூடுதல் நாட்களை தேர்தல் நடத்தும் அதிகாரி எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், பொதுவாக ஒரே நாளில் வேட்புமனு பரிசீலனையை முடித்து, ஏற்கப்பட்டவர்கள் பெயர் விவரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அதேபோன்று, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுக்கள் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி வேட்புமனு ஏற்கப்பட்டது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த தவெக தலைவர் விஜய் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. பெரம்பூரில் விஜயின் மனுவை ஏற்கக் கூடாது என்று பாமக மற்றும் சில சுயேட்சைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பையும் மீறி விஜய் மனு ஏற்கப்பட்டது.
காரைக்குடி தொகுதியில் சீமான் மனு ஏற்கப்பட்டது. இதேபோன்று காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது. சில தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நீண்ட பரிசீலனைக்கு பிறகு அவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோன்று பெரும்பாலான சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் தள்ளுபடியான வேட்புமனுக்களின் விவரங்கள் இன்று பிற்பகலில் தெரியவரும். அதேபோன்று 234 தொகுதிகளிலும் எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டது என்ற விவரமும் இன்று இரவுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இதையடுத்து வருகிற 9ம் தேதி (வியாழன்) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். 9ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இறுதியாக எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற தகவலை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அன்று மாலையே சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், வாக்காளர் இறுதி பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு தாக்கல் செய்து இருந்தனர். அதன்படி வாக்காளர் துணைப் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அச்சிடப்பட இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துணைப் பட்டியல் இணைந்த வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
