×

அருமனையில் பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்

*கணவர் உள்பட 3 பேர் கைது

அருமனை : அருமனை அருகே பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் வாழ்ந்த தொழிலாளியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.குலசேகரம் அருகே ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48).

அவரது மனைவி லதா (44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜஸ்டின் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருமனை பகுதியை சேர்ந்த அஜி (52) என்பவர் ரப்பர் பால் வெட்டும் வேலைக்காக ஈஞ்சகோட்டில் ஜஸ்டின் வீட்டருகே குடி வந்துள்ளார். அப்போது அஜி, லதா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் பழக்கம் தீவிரமடைந்தது. இதையடுத்து அஜி அருமனை அருகே காரோடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து லதா கணவரை விட்டு பிரிந்து ஒரு மகனுடன் அந்த வாடகை வீட்டில் குடியேறினார். அஜி அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இது குறித்து அஜியின் குடும்பத்தினருக்கு தெரியவந்து உள்ளது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர் லதாவுடன் நிரந்தரமாக தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் லதா, அஜி இருந்துள்ளனர். அப்போது அங்கு லதாவின் கணவர் ஜஸ்டின், விஜித் உள்பட 4 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து உடைத்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று அங்கிருந்த அஜியை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த லதாவை சாவியால் குத்தினர். இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் அருமனை இன்ஸ்பெக்டர் கமலாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுயநினைவை இழந்து கிடந்த அஜியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், லதாவை அருமனை அரசு மருத்துமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

அஜி மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜஸ்டின் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அருமனையில் பதுங்கி இருந்த ஜஸ்டின் மற்றும் அவரது நண்பர்கள் அஜித், சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Arumana ,Inchakodu ,Kulasekaram ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை