×

மதிய உணவு தரமாக வழங்கப்படுகிறதா?

பாடாலூர், பிப்.19: ஆலத்தூர் தாலுகா காரை அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் உரிய பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19ம்தேதியும், 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 8ம்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவிகள் வருகையின்போது அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, பதிவேடுகளில் தினந்தோறும் பதியப்பட்டு வருகிறது. ஏதேனும் காய்ச்சல், தலைவலி மற்றும் சளி உள்ள மாணவர்களை கண்டறியும் பட்சத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சத்துணவு மையத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை சுத்தமாகவும், சுவையாகவும், சுகாதாரத்துடனும் வழங்கிட ஆசிரியர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தினந்தோறும் மாணவர்களுக்கு கலவை சாதங்கள் நல்ல முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சார்பில் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்திட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது அறிவினை வளர்த்துக் கொள்வதற்காகவும், தங்களது கல்வி தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் விலையில்லா மடிக்கணிகள் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்து நல்லமுறையில் கற்று தங்களது கல்வியறிவினை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகள் மற்றும் வளாகங்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியன கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்தார்.
ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : lunch ,
× RELATED பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடி வாக்குறுதி