பெரம்பலூர், ஏப். 6: சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் வாகன சோதனைகளை தீவிரமாக மேற்கொள்ளவும் என்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர், வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் வசதிகள், காவல் துறையினரின் பணிப்பகிர்வு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தார். மேலும் ஆய்வின் போது, சோதனை சாவடிகளில் பணிபுரியும் காவல் துறையினரின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தார். மேலும், தேர்தல் நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் வாகன சோதனைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பணியில் ஒழுங்கு, மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். தேர்தல் நடைபெறும் நாளில் அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி(மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

