×

போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் 1000 கிலோ குண்டுகள் இந்தியாவிலேயே தயாரிப்பு

புதுடெல்லி: இந்திய விமானப்படை போர் விமானங்களில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் எம்கே-84 ரக குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் போர் விமானங்களில் பயன்படுத்தப்படுவதற்காக உள்நாட்டிலேயே 1000 கிலோ வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் குண்டின் வால் அலகுகள் மற்றும் உபகரணங்கள் உட்பட ஆறு முன்மாதிரிகளை வடிவமைத்து உருவாக்கும் செயல்முறை அடங்கும். இரண்டாவது கட்டம் கொள்முதல் ஆகும். இது தகுதிபெறும் மேம்பாட்டு முகமைகளுக்கு வணிகரீதியான முன்மொழிவுக்கான டெண்டர்களை வழங்குவதன் மூலமாக தொடங்கும்.

இந்த ரக குண்டுகள் தற்போது இந்திய விமானப்படையால் இயக்கப்பட்டு வரும் ரஷ்ய மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் ஆகிய இரண்டிலும் பொருத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டமானது மேக்-2 (Make-II) என்ற துணைப் பிரிவின் கீழ் செயல்படுத்தப்படும். மொத்தம் 600 வான்வழி குண்டுகளை கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கான உத்தேச காலக்கெடு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதில் மாதிரி உருவாக்கம், பயனர் சோதனைகள் மற்றும் மதிப்பீடு, வணிக செயல்முறைகள், ஒப்பந்தத்தை இறுதி செய்தல் ஆகிய அடுத்தடுத்த கட்டங்கள் அடங்கும். இந்த சோதனைகள் இந்திய விமானப்படை பிரிவுகளால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,New Delhi ,Indian Air Force ,Ministry of Defense ,
× RELATED ஈரான் போரால் பொருளாதார நெருக்கடி...