×

நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்டது காட்டுதர்பாரை பிரதிபலிக்கிறது: மம்தா அரசு மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் கூச் பெஹாரில் பிரதமர் மோடி நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு, வாக்காளர் பட்டியல் பெயர் நீக்க விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய மால்டாவுக்கு வந்த 7 நீதிபதிகளை போராட்ட கும்பல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. இது எத்தகைய அரசாங்கம்? இந்த அரசாங்கம் மேற்கு வங்க மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

மால்டாவில் நடந்தது திரிணாமுல் காங்கிரசின் பெரும் காட்டுதர்பாருக்கு ஒரு உதாரணமாகும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்தவே ஆளுங்கட்சி முனைப்புடன் செயல்படுகிறது. இந்த தேர்தல் இரு துருவங்களுக்கு இடையேயான மோதல். ஒருபுறம் திரிணாமுல் காங்கிரசால் பரப்பப்படும் பயம் இருக்கிறது. மறுபுறம் பாஜவின் நம்பிக்கை இருக்கிறது. ஒருபுறம் திரிணாமுலின் ஊழல், சுரண்டல் பயம் இருக்கிறது. மறுபுறம் வளர்ச்சியை துரிதப்படுத்தும் பாஜ இருக்கிறது.

ஒருபுறம், மாறிவரும் மக்கள் தொகை மாற்றங்களால் சொந்த மண்ணிலேயே சுதந்திரத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மறுபுறம், சொந்த மண்ணில் பெருமையுடனும் தலைநிமிர்ந்தும் வாழ்வோம் என்ற பாஜவின் நம்பிக்கை உள்ளது. ஊடுவல்காரர்களை பாதுகாக்கவே திரிணாமுல் காங்கிரஸ் எஸ்ஐஆர் மற்றும் சிஏஏ ஆகியவற்றை எதிர்க்கின்றனர்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, அவர்களின் ஒவ்வொரு பாவச் செயலுக்கும் நிச்சயம் கணக்குக் கேட்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குற்றவாளி எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சரி, இம்முறை நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும். இவ்வாறு பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Tags : Modi ,Mamata government ,Kolkata ,Cooch Behar ,West Bengal ,
× RELATED தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5...