செங்கல்பட்டு, ஏப்.5: மாவட்ட தலைநகரான செங்கல்பட்டை முதன்மை நகராட்சியாக தரம் உயர்த்துவதே எனது லட்சியம் என்று திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி உறுதியுடன் தெரிவித்தார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி நேற்று செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து, திமுக நகர செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமையில் நடந்த டூவீலர் பிரசாரம் செங்கல்பட்டு மார்க்கெட், தட்டான்மலை தெரு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, அண்ணா நகர், ஜெ சி கே நகர், பழைய ஜிஎஸ்டி சாலை, அனுமந்த புத்தேரி, சின்ன நத்தம், பெரிய நத்தம், வேதாச்சலம் நகர், சின்ன மணியக்காரர் தெரு, பெரிய மணிக்காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
செங்கல்பட்டு நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும், மாவட்டத்தின் தலைநகரான செங்கல்பட்டை முதன்மை நகராட்சியாக உயர்த்துவதே எனது லட்சியம், நகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட பாலாறு குடிநீர் வழங்குவதை உறுதி செய்வேன். நகராட்சியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு ரயில் நிலையத்தை ஒன்றிய அரசை வலியுறுத்தி அனைத்து வசதிகளுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையமாக மாற்றுவேன்.
கொலவாய் ஏரியை தூர்வாரி சுற்றுலாத்துறை மூலம் மீண்டும் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன், என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், வர்த்தகர் அணி மாவட்ட துணை செயலாளர் வள்ளுவன், மாவட்ட பிரதிநிதி ராஜி, நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் ஆனந்த், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ் கண்ணன், மாணவரணி செயலாளர் மாலிக், இளைஞரணி செயலாளர் மகேஷ் உள்ளிட்ட திமுகவினர், காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
