×

இந்த வார விசேஷங்கள்

4.4.2026 – சனிக்கிழமை காரைக்கால் அம்மையார் குரு பூஜை

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர். கயிலை மலையின் மீது கால்கள் படக்கூடாது எனக் கருதி கைகளால் நடந்து சென்றவர்.அந்தாதி நூல்களில் மிகப் பழமையான நூலாகக் கருதப்படும் அற்புதத் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர். இந்த நூல் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இது தவிர திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற் றியுள்ளார். இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மை யார் கோவில் என்று மக்களால் அழைக்கப் பெறுகிறது. காரைக்கால் அம்மையாரின் பெருமையை விளக்கும் மாங்கனித் திருவிழா தனிப்பெரும் விழாவாக ஜூன் ஜூலையில் காரைக்காலில் நடை பெறும். அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அதாவது இன்று எல்லா சிவாயங்களிலும், சிவனடியார்கள் இல்லத்திலும் அனுஷ்டிக் கப்படும். அன்று அபிஷேக ஆராதனைகள் செய்து காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை ஓதுவார்கள்.

4.4.2026 – சனிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தேவயானை திருமணம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகும். இங்கு சூரபத்மனை வதம் செய்த பிறகு, இந்திரனின் மகளான தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்டார். இந்த தெய்வீகத் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா 23-3-2026 கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று (4-4-2026) முருகன் தெய்வயானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருக்கல்யாண விழாவில், முருகப்பெருமான் தெய்வானைக்குப் பரிசம் போடுதல், மாலை மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 5ம் தேதி தேரோட் டமும் 6ம் தேதி தீர்த்த உற்சவமும் நடைபெறுகிறது.

5.4.2026 – ஞாயிற்றுக் கிழமை சங்கடகர சதுர்த்தி

பௌர்ணமிக்கு அடுத்து வரக்கூடிய நான்காவது நாள் சதுர்த்தி நாள். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.விநாயக பெருமானுக்கு எளிதான அருகம்புல்லையும் உலர்ந்த பழங்களையும் வைத்து பூஜை செய்வதன் மூலமாக பாவங்கள் தொலையும். குடும்பத்தில் சுபிட்சம் தலைதூக்கும். சுபத் தடைகள் விலகும். எண்ணிய காரியங்கள் வெற்றியாகும். உடலில் உள்ள நோய்கள் குண மடையும். ஆரோக்கியம் மேம்படும். நிலையான சந்தோஷம் கிடைக்கும். அறிவும், ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்.

5.4.2026 – ஞாயிற்றுக் கிழமை – தாயமங்கலம் மாரியம்மன் பொங்கல் விழா

தென் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமான . தாயமங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மானாமதுரையிலிருந்து சுமார் 18 கி.மீ. மற்றும் சிவகங்கையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.பங்குனித் திருவிழா மிகப்பிரபலமான 11 நாள் விழாவாகும் கேட்ட வரத்தை வாரி வழங்கும் கன்னித் தெய்வமாக, நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் அன்னை அருள் பாலிக்கிறாள். இத்தல அம்மன் “வேப்பிலைக்காரி”, “மருத்துவச்சி” என்று அழைக்கப்படுகிறார், அம்மை நோய் உள்ளிட்ட வற்றைத் தீர்ப்பதாக மக்கள் பெரும் திரளாக வகிருகின்றார்கள். மார்ச் 29 கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப். 5-ல் (இன்று) பொங்கல் விழா நடைபெறுகிறது. இந்தக் கோயில் சுற்றுவட்டார 22 கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கு கிறது. பிடிமண் கொடுத்தல் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

6.4.2026 திங்கள்கிழமை கோவில்பட்டி பூவண்ணநாதர் பூத வாகன காட்சி

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவண்ணநாதசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவாலயமாகும். இத்தலத்தில் மூலவராகப் பூவனநாத சுவாமியும், அம்பாளாகச் செண்பகவல்லி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். தென்மாவட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, அம்பாளே ஆட்சி செய்யும் தலமாக இது கருதப்படுகிறது.இக்கோயில் செண்பக மன்னனால் கட்டப் பட்டதால், இத்தல இறைவிக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் ‘சதுங்கன்’, ‘பதுமன்’ என்ற இரண்டு நாகத் தலைவர்கள், இத்தல இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். இதனால் இறைவனுக்குப் பூவனநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. செண்பகவல்லி அம்பாள் 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.நின்ற கோலத்தில் இருக்கும் அம்பிகையை, அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் பங்குனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழாவில், தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவர். இன்று பூத வாகன காட்சி.

7.4.2026 – செவ்வாய்க் கிழமை வராக ஜெயந்தி

திருமால் இந்த உலகத்தைக் காப்பதற்காக எண்ணற்ற அவதாரங்களை எடுத்தார். அதில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்து விட்டான். அதனால் இந்த உலகம் இருண்டது. உயிர்கள் கவலையடைந்தன. தேவர்கள் வருந்தினர். அவர்கள் இந்த உலகத்தை மீட்டெடுப்பதற்காக மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்த பொழுது மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் காத்தார் என்பது புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் பலராலும் கொண் டாடப்பட்ட அவதாரம் இது. வராகப் பெருமாளை வணங்குவோர் நீண்ட புகழ், நிலைத்த செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெறுவர். வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

7.4.2026 – செவ்வாய்க் கிழமை திருவெள்ளறை கருட சேவை

108 வைணவத் திவ்ய தேசங்களில், இந்த தலம் 3-வது திருத்தலமாகக் கருதப்படுகிறது.சிவபெருமான், பிரம்மா, மார்க் கண்டேய முனிவர், பூமா தேவி, இந்திரன், சந்திரன் மற்றும் சிபி சக்ரவர்த்தி போன்றோருக்கு புண்டரீகாட்ச பெருமாள் கருடவாகனத்தில் காட்சியளித்ததாக புராண வரலாறு உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும். இன்று கருட சேவை.

7.4.2026 – செவ்வாய்க் கிழமை ஒழுகை மங்கலம் விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகிலுள்ள ஒழுகைமங்கலம் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 5 வாரங்களுக்கு மிகச் சிறப்பாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பசுவின் பால் (ஒழுகை) சொரிந்து, சுயம்புச் சிலை வெளிப்பட்டதால் இவ்வூர் ‘ஒழுகை மங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது. பூச்சொரிதல், கொடியேற்றம், மற்றும் அம்மன் வீதியுலா ஆகியவை இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாகும்.

8.4.2026 – புதன்கிழமை அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் பூக்குழி

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று அருப்புக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் பங்குனிப் பொங்கல் விழா துவங்குகிறது. கோவிலில், பால்குடம் எடுப்பவர்கள், அலகு குத்துபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்கள், பூக்குழி இறங்குபவர்கள் என நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் கொடியேற்றம் அன்று முத்துமாரியம்மன் கோவில் பூசாரி மூலம் தங்கள் கையில் விரல் மஞ்சள் கிழங்குடன் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார்கள். இதுவே காப்பு கட்டுதல் எனப்படுகிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வரை கையில் காப்பு கட்டியிருப்பார்கள். .9ம் நாளில் பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். மறுநாள் அதிகாலையில் பூக்குழி நடக்கும். இன்று பூக்குழி.

8.4.2026 – புதன்கிழமை பதஞ்சலி சித்தர் குருபூஜை,

யோகக்கலை மற்றும் சைவ பாரம்பரியத்தில் மிக முக்கிய வழிபாடாகும். 18 சித்தர்களில் ஒருவரான இவர், நந்தி தேவரின் சீடர், யோக சூத்திரம் அருளியவர். ராமேஸ்வரம் போன்ற சிவத்தலங்களில் இவரின் ஜீவசமாதியில் சிறப்பாக குருபூஜை நடைபெறும். யோக ஞானம் பெறவும், உடல் மற்றும் மனநலம் பெறவும் இவரது வழிபாட்டில் 16 போற்றிகளைக்கூறி, \”ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி\” என்ற மூலமந்திரத்துடன் பூஜை செய்யப்படுகிறது. பதஞ்சலி சித்தர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ராமேஸ்வரம் கோயில், சிதம்பரம், மற்றும் ஆதிபத்மாசனத்தில் (திருப்பத்தூர்) உள்ள ஜீவசமாதிகளில் குருபூஜை விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.இன்று பங்குனி மூலம். பதஞ்சலி சித்தர் குருபூஜை.

9.4.2026 – வியாழக்கிழமை திருக்குறுங்குடி கருட சேவை

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில் இன்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும் இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றதுடன் தொடங்கியது. இன்று 5-ம் திருவிழாவில் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். பின்னர், அழகிய நம்பிராயர் மற்றும் தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும் அன்று மாலையில் அழகிய நம்பிராயர், வீற்றிருந்த நம்பி, சயன நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி ஆகிய 5 சந்நிதிகளின் உற்சவர்களும், 5 கருட வாகனங்களில் எழுந்தருள்வர்.. அலங்காரமாகி, தீபாராதனை, தீர்த்த விநியோகம் நடைபெறும். இரவு 9 மணியளவில் ஒவ்வொரு எம்பெருமானும் ராயகோபுர வாசல் கடந்து படியேற்ற சேவை நடைபெறும். மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக ஐந்து பெருமாளும் வலம் வருவதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.

9.4.2026 – வியாழக்கிழமை திருக்குற்றாலம் குற்றாலநாதர் பங்குனி விழா

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவ தலங்களில் மிகவும் தொன்மையானது .இக் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின்போது குற்றாலநாதர் மற்றும் குழல்வாய்மொழி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி வீதி உலா வருவார். இன்று ரதம்.

10.4.2026 வெள்ளிக்கிழமை சீதள அஷ்டமி

பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி நாள் சீதளா அஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது. சீதளா அஷ்டமி என்பது அம்மன் வழிபாட்டில் மிகவும் முக்கியமான நாள் ஆகும். இந்த நாளில் சீதளா அம்மன் அல்லது சீதளாதேவி வழிபடப்படுகிறாள். இந்த அம்மன் நோய் நிவாரண சக்தி உடைய தெய்வமாகும். கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை குறிப்பாக மாரியம்மனை வழிபடுவர், வழிபாடு ஒருநாள் முன்னதாக சப்தமி திதியில் இருந்தே தொடங்குகிறது. ராஜஸ்தான் போன்ற வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டிலும் கோடை விழா, கூழ் வார்த்தல் விழா என நடைபெறுகிறது.

Tags : Karaikal Ammaiyar ,Guru Pooja Karaikal Ammaiyar ,Kailash mountain ,Andathi ,
× RELATED மனதுக்கினியானை மனதில் நிறுத்துவோம்!