×

வீட்டில் வளம் பெருக…

புதுமனைப் புகுவிழாவின் போதோ புதிதாக வீடு மாறும்போதோ சில சடங்குகளைச் செய்வார்கள். ஹோமம் வளர்த்தல், பால் காய்ச்சுதல் போன்ற சடங்குகள் செய்யப்படுவதற்குக் காரணம், புதிய வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் வருவதற்கும், தீய சக்திகள் அண்டாமல் இருப்பதற்கும்தான்.

முஸ்லிம்களிடமும் சில வழக்கங்கள் உண்டு. புது வீடு கட்டி குடிபுகும்போதோ, புதிதாக வாடகை வீட்டிற்குச் செல்லும்போதோ குர்ஆன் வேதத்தை ஓதுவார்கள். குறிப்பாக, குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தை ஓதுவார்கள். அதிலும் குறிப்பாக, இரண்டாம் அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களைக் கண்டிப்பாக ஓதுவார்கள்.

என்ன காரணம்? இறைத்தூதர் அவர் களின் வழிகாட்டுதல். “உங்கள் இல்லங்களில் அல்பகரா அத்தியாயத்தை ஓதுங்கள். ஏனெனில் அல்பகரா அத்தியாயம் ஓதப்படும் இல்லத்தில்
ஷைத்தான் நுழைய மாட்டான்.” (ஹாக்கிம்) திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் சிறப்புகளையும் நன்மைகளையும் எடுத்துரைக்கும் நபிமொழிகள் ஏராளம் உள்ளன. ஒருமுறை இறைவனின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) ஓர் அற்புதமான செய்தியைச் சொன்னார்கள்.

“இறைவன் வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினான். அந்த நூலிலிருந்து இரண்டு வசனங்களை அல்பகரா அத்தியாயத்தின் இறுதியில் அருளியுள்ளான். எந்த வீட்டில் மூன்று இரவுகள் அந்த இரு வசனங்கள் ஓதப்படுகின்றனவோ அந்த வீட்டை ஷைத்தான் நெருங்க மாட்டான்.” (அஹ்மத்) அதாவது, எளிய மக்களின் மொழியில் சொல்வதாயின் இந்த இரண்டு வசனங்கள் ஓதப்படும் வீட்டில் காத்து கறுப்பு எதுவும் அண்டாது.

நபிகளார்(ஸல்) மேலும் கூறினார்கள். “அல்பகரா அத்தியாயத்தை ஓதியவருக்கு அதன் காரணத்தால் சொர்க்கத்தில் மகுடம் ஒன்று அணிவிக்கப்படும். ”அல்பகரா அத்தியாயத்தின் முழு மொழிபெயர்ப்பையும் இங்கே தர இயலாது. எனினும் அதன் இறுதி வசனம் ஓர் அற்புதமான இறைஞ்சுதல் ஆகும்.

“இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாகச் சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே. அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே. நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள். “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும் பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே. “எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்சென்றோர் மீது நீ பாரத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே.

“எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள்மீது சுமத்திவிடாதே. “எங்களைப் பொறுத்தருள்வாயாக. எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக. எங்கள் மீது கருணை பொழிவாயாக. நீயே எங்கள் பாதுகாவலன் ஆவாய். (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக.” (குர்ஆன் 2:286) வீடுகளில் இயன்றவரை அல்பகரா அத்தியாயம் ஓதுவோம். வீடுகளில் நலம் பெருகும், வளம் பொழியும். இறைவனின் அருளும் பாதுகாப்பும் வீட்டைச் சூழ்ந்துகொள்ளும்.

– சிராஜுல்ஹஸன்

Tags : Muslims ,
× RELATED இந்த வார விசேஷங்கள்