×

நம்மைப் பேணும் அம்மை காண்…

காரைக்கால் அம்மையார் குரு பூஜை 4-4-2026

நிலத்தில் நிற்கும் சகலருக்கும் கடல் ஆச்சரியம். கடல் என்பதும், இந்த பூமி என்பதும், பிரபஞ்சமும் இன்னும்பிறவும் இதைவிட பிரம்மாண்டம். இதற்கே மலைத்துப் போனால் எப்படி? ‘வியந்து கேட்கக் கேட்க நீளும் வாழ்வின் பயணம்’ என எப்போது கடலைப் பார்த்தாலும் புனிதவதிக்குத் தோன்றும்.அது காரைக்கால். பல கலங்கள்பயணிக்கும். கரை வரும். வியாபாரம் என்பதே இங்கே சகலமும். வணிகர்களின் தலைவன் தனதத்தன் மகளே புனிதவதி.

ஈசன் பற்றிய பேச்சே புனிதவதியின் விளையாட்டு. பொழுதுபோக்கு. பருவம் அடைந்தபின்னர் அவளுக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கியது. வணிகனுக்கு வணிகனின் வலியும், அவனது பயணத்தின் தேவையும் புரியும் என்பதால் நாகை வணிகனான நீதிபதி என்பவரின் மகனான பரமதத்தன் என்பவனுக்கு மணமுடிக்க முடிவு செய்தனர் பெற்றோர்.அவ்விதமாகவே சகலரும் மகிழும்படியாக புனிதவதி – பரமதத்தன் திருமணம் நடைபெற்றது. தனதத்தனுக்கு ஒரே மகளாக புனிதவதி இருந்தமையால், அவர்களுக்குத் தனித்த ஒரு மாளிகை அமைத்து தரப்பட்டது.

அந்த மாளிகையில் பல சிவனடியார்களை வரவேற்று, விருந்திட்டு உபசரித்தார் புனிதவதி. வணிகனான பரமதத்தனைக் காணவந்த ஒருவர், இரண்டு இனிய மாம்பழங்களை கொடுத்தார். அவைகளை தன் கடை ஏவலாளிடம் தந்து புனிதவதியிடம் தருமாறு அனுப்பினார் பரமதத்தன்.சிறிது நேரத்திற்குள் கடும் பசியோடு ஒரு சிவனடியார் புனிதவதியை அணுகினார். அவரை வரவேற்று உபசரித்த புனிதவதி, கறியமுது சமைக்கப்படாமையால் அன்னம் மட்டும் பரிமாறினார். கறியமுதுக்கு பதில் தன் கணவன் அனுப்பிவைத்த மாம்பழத்தில் ஒன்றைப் பரிமாறினார். சிவனடியார் மகிழ்வுடன் உண்டு விடைபெற்றார்.

மதிய உணவிற்கு வந்த கணவருக்கு கறியமுதுடன் அன்னம் இட்டதுடன் மற்றொரு மாங்கனியை பரிமாறினார். இனிய சுவை உடையதாக அது இருக்க, பரமதத்தன் இன்னொரு மாங்கனியைக் கேட்டார். உடனே, அதைக் கொணர்வதைப் போல் உள்ளே சென்ற புனிதவதியார், ‘இன்னொரு கனிக்கு நான் எங்கு செல்ல’, என்று ஈசனிடம் முறையிட்டு கையை நீட்ட, நீட்டிய கையில் இன்னொரு மாங்கனி வந்தது. அதனை தன் கணவனுக்குப் பரிமாறினார். அவரும் அதை உண்டுவிட்டு, ‘இவ்வளவு சுவை உடைய கனியை எங்கிருந்து பெற்றாய்?’ என வினவ, பொய் உரைக்காமல் நடந்ததை விளக்கினார்.

‘மீண்டும் ஒரு கனி தருவித்து தருக.’ எனக் கேட்ட பரமதத்தனுக்காக மீண்டும் ஈசனைத் தொழுது கைகளை நீட்ட, இன்னொரு மாங்கனி வந்தது. அதை பரமதத்தனிடம் தந்தபோது அந்த மாங்கனி மறைந்துபோனது கண்டு பரமதத்தன் அஞ்சினான். புனிதவதி தெய்வமோ என்ற அச்சத்தில், ‘கப்பலில் சென்று பெரும் செல்வம் ஈட்டி வருகிறேன்.’, என இல்லம் விட்டு நகர்ந்தான், பரமதத்தன். வணிகம் பொருட்டு பாண்டிய நாடு சென்ற பரமதத்தன் புனிதவதியை மணந்ததை மறைத்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். புனிதவதியை தெய்வமாகக் கருதி தனக்குப் பிறந்த மகளுக்கு புனிதவதி எனப் பெயரிட்டார்.

பெரும் செல்வத்தோடு காரைக்காலுக்கு தன் மனைவி மகளோடு வந்து, புனிதவதியின் பாதம் பணிந்தார். ‘ஏன் புனிதவதியைத் தெய்வமாக வணங்கினேன்.’, என விளக்கம் தந்தார், பரமதத்தன்.‘கணவனின் எண்ணம் இதுவாக இருக்க, எனக்கெதற்கு இளமை!’, என ஈசனை மனம் குவித்து வேண்டினாள் திலகவதி. பேயுரு கொண்டாள். எலும்பும், தோலுமாய் மாறிய புனிதவதி திருவந்தாதி பாடினார். ஈசனை இசைத் தமிழால் பாடிப் பதிகம் இயற்றினார்.

பின்னர், புனிதவதியார் கைலாயம் சென்றடைந்து, அந்த புனிதமான இடத்தை காலால் மிதிக்கலாகாது என தலையால் நடந்தார். இவரது அன்பைக் கண்ட ஈசன் ‘அம்மையே!’ என விளித்தார். ‘உனக்கு வேண்டுவதென்ன?’ என ஈசன் வினவினார். அதற்கு காரைக்கால் அம்மையார், “மீண்டும் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல், உம்மை என்றும் மறவாது இருத்தல் வேண்டும். நீ ஆடும்போது உன் திருவடியில் நான் மகிழ்ந்து பாடி இருக்க வேண்டும்.”, என்று வேண்டினார்.

சங்கரனாரும், ‘திருவாலங்காடு வருக. அங்கு என் ஆடல் காண்க!’, என ஆசி தந்தார். திருவாலங்காட்டை தலையால் நடந்து அடைந்து அவர் ‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ பாடினார். ‘‘நம்மைப் பேணும் அம்மை காண்’’ என்றழைத்த ஈசன், புனிதவதியை காரைக்கால் அம்மையார் என சகலரும் கொண்டாட தன் சேவடியில் சேர்த்துக் கொண்டார்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்வின் தத்துவம்

– இல்லறத்து கடமைகளை சற்றே விலகி நின்று செய்து, அசாத்திய மன உறுதியோடு இருப்பின் பெண்களும் இறையை அடையலாம் என்பதின் அடையாளம் இவர் தலையால் நடந்து கயிலையை அடைந்தார் என்பது சகஸ்ராரம் மலர்ந்து வெளியில் கலந்தவர் என்பதையே குறிக்கும்.

சரஸ்வதி சுவாமிநாதன்

Tags : Karaikal Ammayar Guru Pooja ,earth ,
× RELATED ஹர்ஷ யோகம்!