×

நிலத்தடி நீர்மட்டத்தை பொறுத்தே மீன் வளர்ப்பு குத்தகை விடவேண்டும் ஆய்வு செய்ய குழு அமைக்க உத்தரவு

மதுரை, பிப். 19: நிலத்தடி நீர்மட்டத்தை பொறுத்தே மீன் வளர்ப்பு குத்தகை விடுவது குறித்து அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் ெவகுவாக குறைந்து கொண்டே போகிறது. நீர்நிலைகளில் மீன் வளர்ப்பதற்காக தண்ணீரை முழுமையாக தேக்க முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால்தான் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும். எனவே, மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு குத்தகை அனுமதிக்க கூடாது என உத்தரவிடக் கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கும், குடிநீர் தேவையை போக்குவதற்கும் தான் நீர் நிலைகளில் முக்கியத்துவம் தர வேண்டும்.

மீன் வளர்ப்பு குத்தகை விடுவது, இதர பயன்பாடு என்பது முக்கியமானதல்ல. எனவே, இனி வரும் காலங்களில் மாநகராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு குத்தகை விடுவதற்கு முன்பாக வருவாய் துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி தரப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து, நீர் இருப்பு, நிலத்தடி நீர் மட்டம், எதிர்காலத் தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இவற்றின் அடிப்படையில் தான் மீன் வளர்ப்பு குத்தகை விட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது விடப்பட்டுள்ள மீன் குத்தகை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : committee ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு