×

அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் அவலம் ஆத்தூர், சித்தையன்கோட்டை விவசாயிகள் புலம்பல்

சின்னாளபட்டி, பிப். 19: ஆத்தூர், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், அழகர்நாயக்கன்பட்டி, சேடபட்டி, அய்யம்பாளையம் பகுதியில் நெல் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் இப்பகுதிகளில் சுமார் 3000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை இப்பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் நெல்களை புழுதிகாட்டில் கொட்டி வைத்து கொள்முதலுக்காக காத்திருக்கின்றனர். தற்போது இரவில் பனி விழுவதால் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து விடும் என அஞ்சி தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்மணிகளை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி முகமது ஹாஜியார் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.5 ஏக்கருக்கு 60 முதல் 70 மூட்டை வரை நெல் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டுமழை, புயலால் 30 முதல் 40 மூட்டை வரைதான் கிடைத்துள்ளது.
இதனால் உயிர் பிழைத்த நெல் மணிகளை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் இங்கு கொள்முதல் செய்ய இதுவரை மையம் ஏற்படுத்தாமல் இழுத்தடிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து இப்பகுதி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றனர்.


Tags : Attur ,Sithayankottai ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...