×

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

*திரிகடுகாய் பால் : சுக்குப்பொடி, மிளகுப்பொடி – தலா ½ தேக்கரண்டி, தண்ணீர் – 100 மி.லி, பால் – 300 மி.லி, தேவைக்கேற்ப பனங்கற்கண்டு, சிட்டிகை மஞ்சள். பாலை காய்ச்சி ஆறவிடவும். தண்ணீரில் பொடி வகைகள், மஞ்சள் கலந்து கொதிக்கவிடவும். பின்பு வடிகட்டி பாலுடன் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பருகவும். உடல் வலி தீரும்.

*பால் நொய் கஞ்சி : பால் – 500 மி.லி, புழங்கல் அரிசி ெநல் கருணை 100 கிராம், திப்பிலிப் பொடி, மிளகுப் பொடி தலா ½ டீஸ்பூன், சிறிது பனங்கற்கண்டு. வெறும் வாணலியில் குருணை வறுத்து, நான்கு மடங்கு நீர் கலந்து குக்கரில் வேக வைக்கவும். பால் காய்ச்சி, பொடிகள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். கப நோய்க்கு சிறந்தது.

*மருந்து டீ: டீத்தூள், லவங்கப்பட்டை தூள், திப்பிலி தூள், தனியா தூள் – தலா ½ டீஸ்பூன், தண்ணீர் 300 மி.லி, பனங்கற்கண்டு – தேவைக்கு. கொதிக்கும் தண்ணீரில் பொடிகளை போட்டு, கொதித்ததும், பனங்கற்கண்டு கலந்து பருகலாம். உடல் எடை குறைக்க, சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி தீரும்.

*ஸ்பெஷல் ரசம்: சீரகம், துவரம் பருப்பு, மிளகு – தலா 1 டீஸ்பூன், திப்பிலிப் பொடி – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு, உப்பு, பெருங்காயம் – தேவைக்கு. தாளிக்க: நெய் – 1 டீஸ்பூன், கடுகு, சீரகம், கறிவேப்பிலை – சிறிதளவு. புளியை கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு துவரம்பருப்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து பொடிக்கவும். வாணலியில் புளித்தண்ணீர், பொடித்த பொடி சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் தாளிப்புகளை சேர்த்து ரசத்தில் சேர்க்கவும். இருமலை போக்கி பசியை தூண்டும்.

*கிராம்பு குடிநீர்: தண்ணீர் – 2 டம்ளர், கிராம்பு – 8, ஏலம் – 1, சீரகம் – ½ டீஸ்பூன். கிராம்பு, ஏலத்தை நன்றாக தூள் செய்து கொண்டு, அத்துடன் சீரகத்தையும் ஒன்றிரண்டாகப் பொடித்து நீரை கொதிக்க விட்டு பொடியை போட்டு 10 நிமிடம் மூடி விட்டு அடுப்பை அணைக்கவும். சற்று வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும். சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்.

*அதிமதுர பானம்: அதிமதுரம் – விரல் அளவு நீளம், தனியா, சீரகம் – தலா ½ டீஸ்பூன், மிளகு, மஞ்சள் தூள் – சிறிது, எலுமிச்சை பழம் – ½ மூடி தோலுடன், தண்ணீர் – 1 டம்ளர், பனங்கற்கண்டு – தேவைக்கு. அனைத்தையும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு, வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூடாக அருந்தவும். தொண்டை வலிக்கு இதமானது.

*முசுமுசுக்கை கம்பு அடை: கம்பு மாவு – 100 கிராம், அரிசி மாவு – 1 டீஸ்பூன், முசுமுசுக்கை இலை – 10, மிளகுத் தூள் – 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சிறிய வெங்காயம் – 12, உப்பு – ருசிக்கு, பூண்டு – 10 பல் ெபாடியாக நறுக்கவும். நெய், எண்ணெய் கலந்து – தேவைக்கு. இலையை நன்றாக கழுவி அரைத்து, கம்பு மாவுடன் கலந்து, அரிசி மாவு, மிளகுத் தூள், சீரகம், வெட்டிய வெங்காயம், உப்பு, பூண்டும் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து அடை போல வார்க்கலாம். ரத்தக் கொதிப்பினை கட்டுப்படுத்தும்.

தொகுப்பு: டி.ஜெயலட்சுமி, தென்காசி.

Tags : Kumkumam Dozhi ,
× RELATED தொடர் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்… தீர்வு என்ன..?