- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிழக்கு உத்தர பிரதேசம்
- தெற்கு தமிழ்நாடு…
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வழக்கத்தைவிட பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு உத்தரபிரதேசம் முதல் தென் தமிழகம் வரையில் விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை (Trough) நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்துள்ளது.
இந்நிலையில், கோடை கால (ஏப்ரல்) மாதத்துக்கான நீண்ட கால வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிடவும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது வெப்பநிலையில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் வழங்கினாலும், வடக்கு மற்றும் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இயல்பைவிட அதிக வெப்பநிலையுடன் கூடிய வெப்பஅலை (Heat Wave) அதிக நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் வெப்ப அழுத்தம் ஏற்படும், மாநிலம் முழுவதும் அதிகபட்சமாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவும், அசாதாரணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிக வெப்பமான சூழ்நிலை காணப்படுவதுடன், இரவு நேர குளிர்ச்சியும் குறையும். ஒட்டுமொத்தமாக இந்த ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பம் தகிக்கும் மாதமாக இருக்கும். மழை இடையிடையே பெய்தாலும் வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் நீடிக்கும்.
