×

செயற்கை வைர தொழில் துறைக்கு படிப்பு: சென்னை ஐஐடி திட்டம்

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்துக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு என்ற அமைப்பு சென்னை ஐஐடியில் இயங்கி வருகிறது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட இந்த ஆய்வுக் குழு, உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், செயற்கை வைர தொழில் துறையில் இந்தியாவை உலகளவில் முன்னணி நாடாக உருவாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம், ரத்தின தரம் மற்றும் மின்னணு தரத்திலான வைரங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு பெறும். இதனால், தொழில்நுட்பத் திறன்கள் மேம்படுத்தப்படும். ஏற்றுமதி உயரும். புத்தாக்கத் தொழில் மற்றும் தொழில்முனைவுத் திறன் வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை வைரங்கள் பூமிக்கு கீழே வெட்டி எடுக்கப்படும் இயற்கை வைரங்களின் வேதியியல் மற்றும் ஒளியியல் பண்புகளையே கொண்டுள்ளன. செயற்கை வைரங்கள், ஆபரணங்கள் நீங்கலாக பிற பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றவை. மேலும், இந்த ஆராய்ச்சி குழு வைரம் மற்றும் வளர்ந்துவரும் பொருட்கள் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டை 2026 மார்ச் 11 முதல் 13ம் தேதி வரை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடத்தியது. இந்த மாநாடு வைர அறிவியல், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறை மின்னணு பொருட்களில் முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக அமைந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IIT Madras ,Chennai ,Indian Research Group for Laboratory-grown Diamonds ,Union Ministry of Commerce ,
× RELATED 2ம் கட்டமாக 27 வேட்பாளர்கள்: கிருஷ்ணசாமி அறிவிப்பு