சென்னை: பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக பியூஷ் கோயல் பேட்டி அளித்துள்ளார். இன்று தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் உத்தேச வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசிப்பேன் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர் திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம் மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது. பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
இதில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்ட்டது. இதையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பேர் அடங்கிய பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று பிற்பகல்வாக்கில் சென்னை வந்தார். இதையடுத்து வேட்பாளர்கள் பட்டியல் குறித்து பியூஷ் கோயல் அளித்த பேட்டியில்; “பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.இன்று தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் உத்தேச வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசிப்பேன். பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும்” என தெரிவித்தார். பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் மேலும் தாமதமாகியுள்ளது.
