×

எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அரசு விழாக்களை முன்கூட்டியே நடத்தி முடிக்கின்றனர் ஆஸ்டின் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு அதிகாரி பதில் அளிக்க கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில், பிப்.18: குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விஜயகுமார் எம்.பி முன்னிலை வகித்தார். கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் துறைவாரியாக நடந்து வரும் திட்டங்கள், வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

விஜயகுமார் எம்.பி: குமரி மாவட்டத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் கடந்த ஆண்டு எத்தனை தொடங்கப்பட்டுள்ளன. எவ்வளவு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். அதிகாரிகள்: கடந்த ஆண்டில் ஐஸ் பிளாண்ட், கயிறு தொழிற்சாலை, உணவு தயாரிப்பு தொழிற்சாலை உள்பட 6 தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராஜேஷ்குமார் எம்எல்ஏ: சிறுதொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் கடன் பெற வங்கியிடம் சென்றால் அவர்கள் கடன் வழங்குவதில்லை. செக்யூரிட்டி கேட்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி அதிகாரிகள்: இதுதொடர்பாக எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை. ராஜேஷ்குமார் எம்எல்ஏ: குமரி மாவட்டத்தில் வீடுகள், விளைநிலங்கள் உள்ள மின்கம்பங்களை வேறு பகுதியில் சாலையோரம் மாற்றியமைக்க மின்வாரியத்தை கேட்டால் மதிப்பீட்டு தொகையை செலுத்த கூறுகின்றனர். ஆனால் ஏழை மக்களால் லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாமல் மின் விபத்து பயத்தில் இருந்து வருகின்றனர். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ: நாகர்கோவில் ஓட்டுப்புரை தெரு பகுதியிலும் இதுபோன்ற பிரச்னையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்: மின்கம்பங்களை இடமாற்றி அமைக்க மதிப்பீட்டு தொகையை மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டும் என்பது கொள்கை முடிவு. எனவேதான் அவ்வாறு கூறப்படுகிறது. கலெக்டர்: ஆபத்தான நிலையில் உள்ளவற்றை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் எத்தனை விண்ணப்பங்கள் இதுபோன்று உள்ளன என்ற விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். யூனியன் சேர்மன் ஜெகநாதன்: திருவட்டார் மாவட்ட கல்வி அலுவலகம் திருவட்டாரில் தொடங்கப்பட்டது, பின்னர் மார்த்தாண்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை மீண்டும் திருவட்டாரில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: இது தொடர்பாக ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரின்ஸ் எம்எல்ஏ:  குளச்சலை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும்.
விஜயகுமார் எம்பி:  மாவட்டத்தில் மினி கிளினிக்குகள் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன?
சுகாதாரத்துறை அதிகாரி: 15 இடங்களில் தொடங்க திட்டமிடப்பட்டு 2 திறக்கப்படவில்லை.
மனோதங்கராஜ் எம்எல்ஏ: எனது தொகுதிக்குள் 3 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்க தேதி குறிக்கப்பட்டு இதுவரை தொடங்கப்படவில்லை. மினி கிளினிக்குகளுக்கு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. விளம்பரத்திற்காக இதனை செய்கின்றனர்.

கலெக்டர்: மினி கிளினிக்குகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் விரைவில் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆஸ்டின் எம்எல்ஏ: குமரியில் அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சி குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு தகவல் கொடுக்குமாறு ஏற்கனவே தெரிவித்திருந்தோம். சட்டமன்றத்தில் பேசி இதற்காக சபாநாயகரும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எங்களுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. ஆனால் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி என்று கூறிவிட்டு மாலை 4 மணிக்கே முடித்து விட்டு சென்று விடுகிறார்கள். இரவு 7 மணிக்கு என தெரிவித்துவிட்டு எங்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை.
கலெக்டர்: இது தொடர்பாக சமூக நல அலுவலர் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும்.
மனோதங்கராஜ் எம்.எல்.ஏ: தக்கலையில் நடந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தியதுடன் பெண் அதிகாரியையும் அதிமுகவினர் மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதய நோயாளிகளை கண்டறிய வேண்டும்

கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது: குமரியில்  வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் மேற்கூரை சூரியதகடு இணைப்புகள் பொருத்தப்படாத அலுவலகங்களில் விரைந்து பொருத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நபர்களை பொது சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர்கள் கண்டறிந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கு தெரியப்படுத்தி, இதய நோயாளிகள் மேல் சிகிச்சை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Austin MLA ,state ceremonies ,MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...