×

கொச்சியில் உயர்ரக கஞ்சா, போதைப்பொருளுடன் பெண் டாக்டர், வக்கீல் உள்பட 8 பேர் கைது

திருவனந்தபுரம் : கொச்சியில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வைத்து உயர்ரக கஞ்சா, போதைப் பொருட்களுடன் பெண் டாக்டர், வக்கீல் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொச்சியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக கடவந்திரா போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடவந்திரா இன்ஸ்பெக்டர் பிஜூ தலைமையில் போலீசார் அந்த ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.

ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த 3 பெண்கள் உள்பட 8 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடம் இருந்து உயர்ரக கலப்பின கஞ்சா, கொக்கைன் மெத்தபிட்டமின், எக்ஸ்டசி பில் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அனைத்துமே சர்வதேச சந்தையில் மிக அதிக விலையுள்ளவையாகும்.

தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஷாஜி பெர்னாண்டோ, (திருவனந்தபுரம்), ஆஸ்டின் ஜோஸ், (கலூர், கொச்சி), ரோஹித் நாயர், ஜியோ முரளி, (கொடுங்கல்லூர்), அக்பர் ஷா, (நூறநாடு, ஆலப்புழா), பென்சி ராவுத்தர், செய்யது அலி பாத்திமா, அமல் ரகுப்.திருவனந்தபுரம் சங்குமுகத்தை சேர்ந்த ஷாஜி பெர்னாண்டோ ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தான் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு போதைப் பொருள் சப்ளை செய்யும் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் ஆவார்.

ரோஹித் நாயர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். அக்பர் ஷா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். பென்சி ராவுத்தர் பல் டாக்டராகவும், செய்யது அலி பாத்திமா பிசியோதெரபிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருகின்றனர். அப்துல் ரகுப் கொச்சியில் விமான போக்குவரத்து துறை மாணவர் ஆவார். கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Kadavanthira ,
× RELATED ஐஸ்கிரீம் வியாபாரியை கொன்று தலையை...