×

தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பால் விரக்தி; கோவை வந்த மோடியை புறக்கணித்த அண்ணாமலை: வீட்டில் இருந்தே டாட்டா காட்டினார்

டெல்லியில் இருந்து பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜ கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரதமரை வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பாஜவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கோவையில் உள்ள வீட்டில் இருந்து கொண்டே பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தாக கூறப்படுகிறது.

பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலையின் பெயர் இருந்தும் அவர் கோவை விமான நிலையம் வராமல் இருந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்று காத்திருந்தார். இது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் ரகசியமாக ஆலோசனையும் நடத்தி வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் எனவும், அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை எனவும் பரவலாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கினை கடைபிடித்து வந்ததால் திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பாஜ மாநில தலைமையும் உடந்தையாக உள்ளதாக அண்ணமாலையின் ஆதரவாளர்கள் புகார் கூறி வருகின்றனர். தொகுதி ஒதுக்கீடு செய்யாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதோடு விரக்தியின் உச்சியில் அண்ணாமலை உள்ளார்.

பாஜ கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று கூட்டணி கட்சிக்கும் சேர்த்து ஆதரவு தேடி வந்தவர், இப்போது ஆதரவின்றி வீட்டில் முடங்கி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தனக்கு பாஜவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதை நினைத்து ஏமாற்றத்துடன் இருக்கும் அண்ணாமலை தனது எதிர்ப்பை பாஜ மேலிடத்திற்கு தெரிவிக்கும் வகையில், கோவை வந்த பிரதமரை வரவேற்க செல்லவில்லை என பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வானதி சீனிவாசனிடம் இருந்து எப்படியாவது வடக்கு தொகுதியை வாங்கி, சட்டமன்ற தேர்தலில் களம் காண வேண்டும் என தொடர்ந்து அண்ணாமலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாஜ நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால் அண்ணாமலையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு அவரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி தலைமைக்கு புகார் சென்றது. குறிப்பாக பாஜவை உடைத்து தனிக்கட்சி தொடங்குவதற்கான முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. பின்னர் டெல்லி தலைமை கடுமையாக எச்சரித்த பிறகு அந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கிய நிலையில், தற்போது பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்வை அண்ணாமலை புறக்கணித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Annamalai ,Modi ,Coimbatore ,Tata ,Delhi ,Palakkad, Kerala ,Coimbatore airport ,BJP ,president ,Nainar Nagendran ,Union Minister of State… ,
× RELATED பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏப்ரல்...