×

தென்கொரிய நடிகர் மர்ம சாவு: போலீசார் தீவிர விசாரணை

 

பியொங்டேக்: தென்கொரியாவின் பிரபல நடிகர் லீ சாங்-போ தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சர்வதேச திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் திரைத்துறையில் அறிமுகமான லீ சாங்-போ (44), சுமார் இருபது ஆண்டுகளாக தென்கொரியத் தொடர்களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி போலீசார் இவரைத் தவறாகக் கைது செய்தனர்.

எனினும், தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். பல சோதனைகளைக் கடந்து, கடந்த 2024ம் ஆண்டில் ‘தி எலிகண்ட் எம்பயர்’ தொடரின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கி தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். ஆனால் நேற்று பியொங்டேக் நகரில் உள்ள அவரது வீட்டில் லீ சாங்-போ மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அவர் உயிரிழந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, அவரது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த அனைத்துப் பதிவுகளும் நீக்கப்பட்டதை ரசிகர்கள் கவனித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த திறமையான நடிகரின் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Tags : Pyeongtaek ,Lee Sang-bo ,
× RELATED துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின்...