×

கடலாடி-கோவிலாங்குளம் இடையே புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

சாயல்குடி, பிப்.18: தினகரன் செய்தி எதிரொலியாக கடலாடியில் இருந்து கோவிலாங்குளம் செல்லும் சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலாடியில் இருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல சுமார் 14 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டு சுமார் 15 வருடங்களாக மராமத்து செய்யாமல் இருந்தது, கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மலட்டாறு பாலம் வரை மட்டுமே புதிய சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள மோயங்குளம் முதல் கொம்பூதி வரை கிடப்பில் போடப்பட்டது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையிலிருந்து கோவிலாங்குளம் வரை செல்லும் இச்சாலையை மங்களம், ஆப்பனூர் தெற்கு கொட்டகை, கொம்பூதி,     காத்தாகுளம், மோயங்குளம், ஆரைக்குடி, ஒச்சதேவன்கோட்டை, பறையங்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. தொடர் மழை காரணமாக சாலை முற்றிலும் சேதமடைந்து தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியவில்லை. சேதமடைந்த சாலையால்  கமுதியிலிருந்து கடலாடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவதியடைந்து வருவதாக தினகரனில் செய்தி வெளியானது.
 இதன் எதிரொலியாக முதற்கட்டமாக கொம்பூதியில் இருந்து மலட்டாறு பாலம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதேபோன்று தெற்கு கொட்டகை விலக்கு ரோட்டு பகுதியில் இரண்டு இடங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், மலட்டாறு பாலம் முதல் கடலாடி வரை சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, சாலையோரங்கள் அகலப்படுத்தி, தார்ச்சாலை  அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

Tags : road ,Kataladi-Kovilangulam ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...