*ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் அழகான மாவட்டமாகும். கனிமவளம் நிறைந்த இந்த மண்ணில் கிடைக்கும் கிரானைட் கற்கள், மாங்கூழ், ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இத்தனை வசதிகள் இருந்தும் இம்மாவட்ட மக்களுக்கு கானல் நீராகவே ரயில் போக்குவரத்து உள்ளது. வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், நாடு முழுவதும் ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது.
கடந்த 1905ம் ஆண்டு திருப்பத்தூரில் தொடங்கி, பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், 1942ம் ஆண்டு கிருஷ்ணகிரி வரையிலான ரயில் பாதை வசதி துண்டிக்கப்பட்டது.
சரியான வருமானம் இந்த தடத்தில் கிடைக்காததால், அகற்றப்பட்டதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 84 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி என்பது எட்டா கனியாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், ரயில் செல்லாத ஒரே மாவட்ட தலைநகரம் கிருஷ்ணகிரி தான். ஏறத்தாழ அனைத்து மாவட்ட தலைநகரங்கள் வழியாக ரயில் செல்லும் நிலையில், ரயில் போக்குவரத்து இல்லாத நகரமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது.
84 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி நகர மக்கள், கிருஷ்ணகிரி வழியாக இயக்கப்பட்ட ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி 1952ம் ஆண்டு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு, 17 தேர்தல்களை இதுவரையில் சந்தித்த நிலையில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் வாக்குறுதியிலும், கிருஷ்ணகிரி ரயில்வே பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினாலும், இதுவரை ரயில்வே திட்டத்தை தொடங்குவதற்கான செயல்பாடுகள் எதுவும் இல்லை.
கடந்த 2023ம் ஆண்டு கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்யவும், திட்ட மதிப்பீடு தெரிவிக்கவும், நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்தன.
இதனால் இந்த முறை ஜோலார்பேட்டையில் இருந்து, கிருஷ்ணகிரி வழியாக, ஓசூர் வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய பாஜ அரசு அறிவிக்கும். அதற்கான நிதி ஒதுக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்த நிலையில், கடந்த பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லாதது கிருஷ்ணகிரி மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக.வும், தளி தொகுதியில் அதிமுக.வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாஜ.வும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நிலையில், ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து கிருஷ்ணகிரி ரயில்வே திட்டத்தினை செயல்படுத்தாமல் புறக்கணித்து வருவது, இம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
