*அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் அறிவுறுத்தினார்.
அதன்பேரில், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையிலான வேளாண் அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட எலி மருந்து குறித்து நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மருந்துகள் கொள்முதல் செயல்பட்டுள்ளதா, தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு உள்ளதா, தடை செய்யப்பட்ட 3 சதவீதம் வெள்ளை அல்லது மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலி மருந்து விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
வயலில் பயிர்களை தாக்கும் பூச்சி, நோய், களைகள் மற்றும் எலிகளை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு மருந்துகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968ன் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு விதிமுறைகள்படி உற்பத்தி செய்யப்பட்டு, உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் எலிகளை கொல்லும் 3 சதவீதம் வெள்ளை அல்லது மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேடால் பேஸ்ட் என்ற எலி மருந்து உற்பத்தி மற்றும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம்.
ஆன்லைன் வர்த்தகம் மூலமாக விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ரேடால் பேஸ்ட் என்ற மருந்தை உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இந்த மருந்தை விற்பனை செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
