×

விளைநிலங்களுக்கு வெளியே வனப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை

*விவசாயிகள் கோரிக்கை

பாப்பாரப்பட்டி : விளைநிலங்களுக்கு வெளியே, வனப்பகுதியில் மின்வேலி அமைக்க வேண்டும் என தட்டப்பள்ளம் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சி சக்கிலிநத்தம் கிராமத்தில், சின்னாற்றங்கரை பகுதியில் தட்டப்பள்ளம் கிராமம், பாலக்கோடு வனச்சரகம், பிக்கிலி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

வனப்பகுதியையொட்டி விளைநிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் யானைகள் நுழைவதைக் கட்டுப்படுத்த வனத்தைச் சுற்றி யானை அகழிகள் தோண்டப்பட்டுள்ளது. தற்பொழுது வனப்பகுதியையொட்டி சோலார் மின் வேலி அமைக்கும் பணியினை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஏற்கனவே வனப்பகுதியில், யானை அகழிகள் இருக்கும் பகுதியில் இருந்து, சுமார் 500 அடி தொலைவுக்கு விலை நிலங்களில், சோலார் மின் வேலி அமைப்பதற்கான கம்பங்களை வனத்துறையினர் நட்டு வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த விவசாயிகளின் விளைநிலங்கள் மற்றும் தென்னை, புளியமரம், முருங்கை என 30க்கும் மேற்பட்ட மரங்கள் வனப்பகுதியில், சோலார் மின் வேலிக்கு அப்பால் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தட்டப்பள்ளம் பகுதிக்கு, குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் கிணறு உள்ளிட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட பம்பு செட் மோட்டார்கள், ஆஞ்சநேயர் கோயில் கன்னியம்மன் கோயில் மற்றும் அப்பகுதியில் மூதாதையர்களின் மயான பகுதி ஆகியவை சோலார் மின் வேலிக்கு அப்பால் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விளைநிலங்களுக்கு வெளியே, வனத்தையொட்டி சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என்று வனத்துறை அலுவலர்களிடம் முறையிட்ட விவசாயிகளை, பலவந்தமாக அப்புறப்படுத்தி விட்டு, சோலார் மின் வேலி அமைக்கும் பணியினை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கள் விளைநிலங்களை பாதுகாத்து வனப்பகுதியையொட்டி, மின் வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Papparapatti ,Thattapallam ,Sakkilinatham ,Pikkili panchayat ,Dharmapuri district ,Chinnatrangarai ,Palakodu forest ,Pikkili… ,
× RELATED கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் புறக்கணித்தார் அண்ணாமலை!