*சேலம் ஜி.ஹெச்.,ல் மரியாதை
சேலம் : தலைவாசல் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் அளித்த வாலிபருக்கு, அரசு மருத்துவமனையில் மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த பட்டுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இவரது மகன் ஹரி (23), தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வந்தார். கடந்த 23ம் தேதி, பணி முடித்து விட்டு, தலைவாசலில் இருந்து ஆத்தூர் நோக்கி தனது டூவீலரில் ஹரி சென்றார். தலைவாசல் ஆற்றுப்பாலம் அருகே வந்த போது, எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹரியை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 24ம் தேதி மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஹரி மூளைச்சாவு அடைந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வந்தனர். அதன் பேரில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் ஹரியின் உடல் உறுப்புகள் பெறப்பட்டது. அவரது உடலுக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது ஆர்எம்ஓ ஸ்ரீலதா, உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் அன்புதுரை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலித்தினர். தொடர்ந்து ஹரியின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
