திருவொற்றியூர் அருகே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ராட்சத தூணில் அகற்றப்படாத கான்கிரீட் பலகை: விபத்து ஏற்படும் அபாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே மெட்ரோ ரயில்  பணிக்காக ராட்சத தூண் விளிம்பில்  அமைக்கப்பட்ட கான்கிரீட் பலகை அப்புறப்படுத்தாமல் இருப்பதால்  கழன்று கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் 3,770 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகள் கடந்த 2016ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் விம்கோ நகரில், மெட்ரோ ரயில்  முனையம் 9 ரயில் நிலையங்கள், தானியங்கி படிக்கட்டுகள், பார்க்கிங்  இடம் போன்ற அனைத்து வசதிகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டு  தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 14ம் தேதி  தொடங்கி வைத்தார். அப்போது முதல் ரயில் சேவை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் தேரடி, தண்டையார்பேட்டை போன்ற பல இடங்களில் இன்னும் கட்டுமான பணிகள் மற்றும் வாகன பார்க்கிங், சென்டர் மீடியன் போன்ற பல்வேறு பணிகள் முடிவடையாத அவல நிலையே காணப்படுகிறது.

இன்னும் ஒரு சில தினங்களில்  சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால். தேர்தலை முன்னிட்டு அவசரகதியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இந்நிலையில், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் செல்லக்கூடிய பாதையை தாங்கிப்பிடிக்கும் ராட்சத தூண் விளிம்பில் கட்டுமான பணிக்காக கம்பி மற்றும் பலகை போட்டு கான்கிரீட் போடப்பட்டது. ஆனால் அந்த பலகை மற்றும் கம்பியை அப்புறப்படுத்தாமல் கட்டுமான நிறுவனம் அப்படியே கிடப்பில் விட்டுவிட்டது. இதனால் மெட்ரோ ரயில் போகும்போது அதிர்வு ஏற்பட்டு  எந்த நேரமும் அது கழண்டு கீழே செல்லும் வாகனங்கள் மீதோ அல்லது பொதுமக்களின் மீதோ  விழுந்து விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>