×

ஏப்.2ம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரசாரம்: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட 6ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். திமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்பது முடிந்து கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதாவது காங்கிரஸ் 28 தொகுதிகள், தேமுதிக 10, விசிக 8 இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஓதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை என 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதே நேரத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு தொகுதிகள் எவை என்பது அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது முடிந்துள்ளதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை அவர் வரும் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளார். 2ம் தேதி மாலை திருவாரூரில் இருந்து முதல்கட்ட பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். அன்றைய தினம் மாலை திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 3ம் தேதி காலை ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலையில் திருவெறும்பூரில் நடைபெறும் ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார். 4ம் தேதி காலை கரூர், மாலை திருப்பூர் பொதுக்கூட்டம், 5ம் தேதி காலை நாகர்கோவில், மாலை திருநெல்வேலி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து 6ம் தேதி காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து அவர் 21ம் தேதி வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிநாளான 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும், மாலையில் தான் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதேபோல திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் தேர்தல் களம் மேலும் சூடிபிடிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,MK Stalin ,Thiruvarur ,Kolathur ,Chennai ,Tamil Nadu ,DMK ,
× RELATED நவரை பட்டத்தில் அறுவடை மும்முரம் நெல்...