மாநில அளவிலான கபடி போட்டி திருவாரூர் மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

மன்னார்குடி, பிப். 17: தமிழ் மாநில 47வது சிறுவர், இளையோர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டரங்கில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுபோல், தமிழ்நாடு மாநில 47வது ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ராணிமேரி கல்லூரி விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள மாவட்ட அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வடுவூர் உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் சிறுவர், இளையோர் பிரிவில் 100 வீரர்களும், ஜூனியர் பெண்கள் பிரிவில் 40 வீராங்கனைகளும் பங்கேற்றனர். இவர்களுக்கு பல்வேறு தகுதி சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

அதிலிருந்து சிறுவர், இளையோர் அணிக்கு 17 பேரும், ஜூனியர் பெண்கள் அணிக்கு 15 வீராங்கனைகளையும், திருச்சி காவலர் அணி கபடி வீரர் நித்தியானந்தம், வடுவூரை சேர்ந்த மாநில கபடி வீரர் சுகன், உடற்கல்வி ஆசிரியர்கள் உதயக்குமார், செல்வம், சேகர் உள்ளிட்ட தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். பின்னர், வடுவூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்ற வீரர்களை வாழ்த்தி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் ராஜராஜேந்திரன், ஓய்வு டிஎஸ்பி கணேசமூர்த்தி, அமெச்சூர் கபடி கழக துணைத்தலைவர் பொன் கோவிந்தராஜன், வடுவூர் விளையாட்டு அகாடமி செயலாளர் சாமிநாதன், வடுவூர் ஒய்ஆர்சி கபடி கழக தலைவர் அன்புவேல்ராஜன் ஆகியோர் பேசினர். முன்னதாக செயற்குழு உறுப்பினர் வேலுமணி வரவேற்றார். செவன் கோபுராஸ் கபடி கழக முன்னாள் வீரர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Related Stories:

>