மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்திற்கு 432 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 360 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் நேற்று முன்தினம் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பிரித்து அனுப்பப்பட்டன.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம்- சிறுமுகை சாலையில் உள்ள நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு 432 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 468 விவி பேட், 432 கண்ட்ரோல் யூனிட் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக கொண்டு வரப்பட்டன. பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணமூர்த்தி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும், அறைக்குள்ளும், அறைக்கு வெளியேயும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறையின் முன்பு இரு ஆயுதம் தாங்கிய போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
