* 20 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
* பெண்கள், முக்கிய சமுதாயங்கள் புறக்கணிப்பு
* கூட்டணி கட்சிகளின் தொகுதிகளும் அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் முதற்கட்டமாக 23 வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பட்டியலில் பெண்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட முக்கிய சமுதாயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதேபோல், கூட்டணி கட்சிகளான பாஜ, பாமக, அமமுகவுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.
இதில், பாஜவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்குஒரு தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. புரட்சி பாரதம் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி அதிமுக 170 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
இந்த நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது அதிமுக வெற்றி பெற்றால் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பிரிட்ஜ் உள்ளிட்ட 297 அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 4 மணிக்கு மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, நேற்று காலை அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். அதில், 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். ஏற்கனவே விழுப்புரம் தேர்தலில் கடந்த தேர்தலில் நின்று தோல்வி அடைந்த முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய மக்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 வேட்பாளர்கள் விவரம் வருமாறு தொகுதியில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹல்லி தொகுதியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விசுவநாதன், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையத்தில் பி.தங்கமணி, ராயபுரத்தில் டி.ஜெயக்குமார், மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகம், மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் கே.ராஜு, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் கே.பி.அன்பழகன், நன்னிலம் தொகுதியில் ஆர்.காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், விராலிமலை தொகுதியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ, திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார், சிவகாசி தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரவாயல் தொகுதியில் பா.பெஞ்சமின், கலசபாக்கம் தொகுதியில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பா, பவானி தொகுதியில் கே.சி.கருப்பண்ணன், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி, கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரியலூர் தொகுதியில் தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
முதற்கட்ட பட்டியலின்படி முன்னாள் அமைச்சர்கள் 21 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 16 பேர் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். கே.டி.ராஜேந்திரபாலாஜி 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தமுறை சிவகாசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சி.வி.சண்முகம், கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால், மயிலம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்குகிறார். சி.விசண்முகத்தின் எம்.பி பதவிக்காலம் 2028ம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கலசபாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த 3 மாஜி அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். அதோடு, இந்த பட்டியலில் முக்குலத்தோருக்கு 8 தொகுதிகள், வன்னியர் 5, கவுண்டர் 4, நாயுடு, மீனவர், முதலியார், ஆசாரி, பட்டியல் சமூகம், செட்டியார் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு தொகுதி என 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒருவர் கூட பெண்கள் இல்லை. மேலும், நாடார், தேவேந்திர குல வேளாளர், முஸ்லிம்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அதிமுக முன்னாள் பெண் அமைச்சர்கள் வளர்மதி, ேகாகுல இந்திரா மற்றும் அதிமுக முன்னணி தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டவர்கள் பெயர் முதல் பட்டியலில் இடம் பெறாததால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
* ஜெகன்மூர்த்தி விரக்தி இன்று முக்கிய முடிவு
அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் நின்று வெற்றிபெற்ற புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்திக்கு இந்த முறை ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விரக்தி அடைந்துள்ளார். இதுகுறித்து ஜெகன்மூர்த்தி கூறும்போது, ‘‘4 சீட்டு தாரன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க. இப்போ என்னை கிண்டல் பண்ணுறாங்க. நாங்கள் எதிர்பார்த்தது வேற, தற்போது நடந்தது வேற. அதனால் எங்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி உள்ளோம். அதில் என்ன முடிவு சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவோம். இதுகுறித்து இன்று முடிவு செய்து அறிவிக்கிறேன்,’’ என்றார்.
* 170 தொகுதியில் வேட்பாளர்கள் இரட்டை இலையில் போட்டி
அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, தமமுக 1, புரட்சி பாரதம் 1 தொகுதி என மொத்தம் கூட்டணி கட்சிகளுக்கு 65 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது. இதில் பாஜ, தமாகா, தமமுக ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. பாமக மாம்பழம் சின்னத்திலும், அமமுக குக்கர் சின்னத்திலும், ஐஜேகே தனி சின்னத்திலும் போட்டியிடுகிறது. புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 169 இடத்தில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. புரட்சி பாரதத்தையும் சேர்த்தால் 170 இடங்களில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பாஜவின் தாமரைச் சின்னத்தில் 33 பேர் போட்டியிடுகின்றனர்.
* புநீக ஏ.சி.சண்முகம் கழற்றி விடப்பட்டார்
அதிமுக கூட்டணியில் போட்டியிட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், அவருக்கு அதிமுக கட்சியில் சீட் வழங்கப்படாமல் கழற்றி விடப்பட்டுள்ளார். அதேபோன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கும் அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை.
* 2021ல் தோற்ற தொகுதிகளை வாங்காமல் நழுவிய பாஜ
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜவுக்கு 20 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதன்படி ஆயிரம்விளக்கு, கன்னியாகுமரி, தளி, உதகமண்டலம், கோவை மேற்கு, மதுரை வடக்கு, குளச்சல், விளவங்கோடு, திருவையாறு, நாகர்கோவில், மானாமதுரை (தனி), கிணத்துக்கடவு, திருப்பூர் வடக்கு, தாராபுரம் (தனி), தொண்டாமுத்தூர், சிங்கநல்லூர், காவேரிப்பட்டினம், நாகப்பட்டினம், நெல்லை, பரமக்குடி (தனி) ஆகிய 20 தொகுதிகளில் பாஜ போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தற்போது 2026ம் ஆண்டு தேர்தலில் பாஜவுக்கு 27 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்தமுறை போட்டியிட்ட 20 தொகுதிகளில், தோல்வியடைந்த 14 இடங்களை பாஜ இந்தமுறை அதிமுகவிடம் இருந்து பெறவில்லை. 2021ல் அதிமுக அதிக வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்த 21 இடங்களை தற்போது பாஜ மிரட்டி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற திருநெல்வேலி (நயினார் நாகேந்திரன்), கோவை தெற்கு (வானதி சீனிவாசன்) ஆகியோர் தற்போது அந்த தொகுதிகளில் நின்றால் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால், அதை அதிமுகவிடமே கொடுத்துவிட்டு புதிய தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரம் அனைத்தும் பாஜ டெல்லி தலைவர் அமித்ஷா முன்னிலையிலேயே நடந்ததுள்ளதாகவும், இதனால்தான் அமித்ஷா – எடப்பாடி ஆகியோர் பல கட்டங்களாக டெல்லியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று, அதிமுக தற்போது வெற்றிபெற்று எம்எல்ஏவாக உள்ள கோவை வடக்கு (அம்மன் கே.அர்ஜூனன்), முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபால் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவினாசி (தனி) ஆகிய 2 தொகுதிகளை பாஜவுக்கு தாரைவார்த்துள்ளது. அவினாசி தொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
