கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வாக்குகளைப் பெற்றதே தவிர, அச்சமூகத்திற்கு எதையும் செய்யவில்லை. பாஜவை நான் வளர்த்துவிட்டதாக கூறுவது பொய் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டினார். கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒவைசி கூறியதாவது: முஸ்லிம்களுக்கான ஒரு சுதந்திரமான அரசியல் தலைமையை உருவாக்க,எனது கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி கட்சியுடன் கைகோர்த்துள்ளது. சுமார் 5 லட்சம் ஓபிசி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் பல முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.
இது ஒரு பிரச்னையே இல்லையா?. மேற்குவங்கத்தில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 30 சதவீதம் உள்ளனர். அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் என்ன? வெறும் 7 சதவீதம் மட்டுமே. எத்தனை முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்? எத்தனை முஸ்லிம் ஆண், பெண் பிள்ளைகளால் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியவில்லை? 2016ல் பா.ஜ மேற்குவங்கத்தில் 3 இடங்களை மட்டுமே வென்றது. ஆனால் இப்போது அவர்களிடம் 77 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நான் அவர்களை வெற்றிபெறச் செய்தேனா? பாஜ வளர்வதற்கு நான் காரணமாகும் அளவுக்கு எனக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? இவ்வாறு பேசினார்.
* ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பலி பெண் டாக்டரின் தாயாருக்கு பா.ஜ சார்பில் தேர்தல் சீட்
மேற்குவங்க மாநிலம் ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த 31 வயது பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் தாய் ரத்னா தேப்நாத், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பானிஹாட்டி தொகுதியில் பாஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மேற்குவங்க பா.ஜ வேட்பாளர் 3வது பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், துயரத்தில் ஆழ்ந்திருந்த அந்தத் தாயார் முறைப்படி தேர்தல் களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
