×

மேற்குவங்கத்தில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சி; பாஜகவின் ஒற்றையாட்சிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: எதிர்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் ஒற்றையாட்சி அதிகாரத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறைகூவல் விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2025ம் ஆண்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, வரும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என திரிணாமுல் கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி முடிவெடுத்திருந்தார். அந்த பழைய முடிவில் இருந்து தற்போது ஒரு படி மேலே சென்று, தேசிய அளவில் ஜனநாயகத்தை காக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வருகிறார். சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று வடக்கு வங்காளத்திற்கு புறப்பட்ட மம்தா பானர்ஜி.

அப்போது நிருபர்களிடம் கூறுகையில், ‘நாட்டில் தற்போது ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகார போக்கு நிலவுகிறது. இதனை தடுத்து நிறுத்த பாஜக அல்லாத மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, விசாரணை முகமைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத குடியரசு தலைவர் ஆட்சியை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் மூலம் மாநிலத்தில் பணியாற்றி வந்த 70க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையும், 73 தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் அதிரடியாக மாற்றம் செய்துள்ளனர். இது மாநில நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதையே காட்டுகிறது.

கடந்த பிப்ரவரியில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தகுதியான வாக்காளர்களின் பெயர்களை நீக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நானே நேரில் ஆஜராகி முறையிட்டேன். சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி ஒரு போர் போன்ற சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தற்போது நமக்கு உள்ளது’ என்று கூறினார்.

Tags : West Bengal ,Mamata Banerjee ,BJP ,Kolkata ,Chief Minister ,West Bengal Assembly ,
× RELATED ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது...