*கத்தி, இரும்பு ராடுகள் பறிமுதல்
புதுச்சேரி : புதுச்சேரி கோரிமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையம் கனரக போக்குவரத்து முனையத்தில் காஸ் குடோன் அருகே 10 பேர் கொண்ட முகமூடி கும்பல் பதுங்கியிருந்தது.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது 5 பேர் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட 5 பேரிடம் விசாரித்தபோது புதுச்சேரி நைனார்மண்டபம் மாதேஷ் (22), சாரம் அன்புமணி (23), ஆகாஷ் (23), விஜயராகவன் (20), ஹரி (எ) ஹரிபிரசாத் (20) என தெரியவந்தது.
அவ்வழியே காரில் மற்றும் நடந்து செல்வோரையும், லாரி உரிமையாளர்களையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை பறிக்க திட்டமிட்டு இருந்ததும், அவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 இரும்பு ராடுகள் மற்றும் 5 முகமூடிகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தப்பியோடிய சாரம் ஸ்கைலேஷ், விழுப்புரம் ஸ்ரீதர், உருளையன்பேட்டை ராகுல், தஞ்சாவூர் அபி, புதுச்சேரி சாரம் வெங்கடேஷ் ஆகிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
