×

மதுரையில் சிலை வைக்கவும் சட்ட போராட்டம் நடத்தி ‘வெற்றி கண்ட’ கலைஞர்

மதுரை, பிப். 17: மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் இன்று முன்னாள் முதல்வர் கலைஞரின் வெண்கல சிலை திறக்கப்படவுள்ளது. இதுவும் சட்டப் போராட்டத்தால் தான் சாத்தியமானது.  தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழ் மொழிக்காகவும், தமிழினத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 5 முறை சுமார் 6,863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். அரசியல் மட்டுமின்றி, கலை, இலக்கியம் என பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவருக்கு மதுரையில் சிலை வைக்க முடிவு செய்த திமுகவினர் நகரின் பல இடங்களில் அனுமதி கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டனர். வழக்கம்போல அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால், தற்போதைய மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி, ஐகோர்ட் மதுரை கிளையின் கதவை தட்டினார். விளைவு சிலை வைக்க அனுமதிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் செவி சாய்க்காத தமிழக அரசு, நீதிமன்றத்தின் உத்தரவை கிடப்பில் போட்டது.

இதனால் மாவட்ட பொறுப்பாளர் தளபதி மீண்டும் ஐகோர்ட் உதவியை நாடினார். தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதிர்ந்து போன தமிழக அரசு உடனடியாக சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை வைக்க அனுமதித்தது. அந்த இடத்தில் தான் கலைஞர் கம்பீரமாக சிலை வடிவில் காட்சி தர உள்ளார். மூத்த வக்கீல் வீரா கதிரவன் கூறும்போது, ‘‘கலைஞர் தன் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்தோடு இணைந்தே பணியாற்றியுள்ளார். அவர் தனது அண்ணன்  அண்ணாவின் அருகே தானும் ஓய்வெடுக்கவே விரும்பினார். ஆனால், அதிமுக அரசு மறுத்தது. இதனால் இறந்தும் சட்டப் போராட்டம் நடத்தி, தனது அண்ணனின் அருகிலேயே ஓய்வெடுக்கும் உரிமையை போராடி பெற்றார். அதைப் ேபால மதுரையில் சிலை வைக்கவும் அதிமுக அரசு மறுத்தது. இங்கும் சட்டப்போராட்டம் நடத்தி தனக்கு சிலை வைத்திடும் உரிமையை போராடி பெற்றுள்ளார். இறந்த பிறகும் கூட இன்னும் கலைஞர் தனது சட்டப் போராட்டத்தை தொடர்கிறார்’’ என்றார்.

Tags : artist ,Madurai ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்