×

அதிகமான தொகுதிகள் கேட்கப்பட்டது நாங்களும் விட்டுக்கொடுத்த பிறகுதான் 10 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டது: பிரேமலதா பேட்டி

சென்னை: அதிகமான தொகுதிகள் கேட்கப்பட்டது, நாங்களும் விட்டுக் கொடுத்த பிறகு தான் இந்த 10 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டது. எனவே நாங்களும் கூட்டணிக்காக தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். திமுக-தேமுதிக தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவிற்கு 10 சட்டமன்ற தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு ராஜ்யசபா வழங்கப்பட்டுள்ளது. எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் கட்டாயம் பதவியேற்பார்.

இந்த கூட்டணி நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் தர இருக்கிறார்கள். வெகு விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க இருக்கிறோம். இன்று 5 பேர் கொண்ட குழுவை அறிவிக்கிறோம். எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்று, நாளைக்கு இறுதி செய்யப்பட்டு வரும் 27ம் தேதி அனைத்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 1ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள், தேமுதிகவும் 1ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

இந்த கூட்டணியில் போட்டியிடும் அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் தேமுதிக கூட்டணி தர்மத்தை மதித்து அனைவரின் வெற்றிக்கு தேமுதிக உழைக்கும், இந்த புகழ் அனைத்தும் கேப்டன் விஜய்காந்திற்கு உரியது, அவருடைய ஆசிர்வாதத்துடன் அவருடைய வழிநடத்திலின்படி மகத்தான வெற்றிக் கூட்டணியாக மாறியுள்ளது, மகத்தான வெற்றி பெறுவோம். மேலும் இது மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி, தொண்டர்கள் விரும்பிய கூட்டணி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

கேப்டன் வெற்றி பெற்ற முதல் தொகுதி விருத்தாசலம், எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்தது ரிஷிவந்தியம், எங்களுடைய 9 எம்எல்ஏக்கள் விசுவாசத்துடன் பயணிக்கும் அந்த தொகுதிகளும், விஜயபிரபாகர் ஏற்கனவே போட்டியிட்ட விருதுநகர் தொகுதி, ஆம்பூர், குடியாத்தம், விருகம்பாக்கம் போன்று வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் உத்தேச பட்டியலில் உள்ளது. இதைவிட அதிகமான தொகுதிகள் கேட்கப்பட்டது, நாங்களும் விட்டுக் கொடுத்த பிறகு தான் இந்த 10 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டது. எனவே நாங்களும் கூட்டணிக்காக தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Tags : Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,DMK ,
× RELATED தாமரை சின்னத்தில் போட்டியிடும்...