×

அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் பலி உ.பி-யில் 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்கு

 

பல்லியா: உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் 5 மருத்துவர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் தேவ்காலி கிராமத்தைச் சேர்ந்த சிவம்சு ராய் என்பவரது மனைவி அனிஷா ராய் (24), சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்காக பல்லியா நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம், லேசர் முறையில் சிகிச்சை அளிப்பதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், லேசர் சிகிச்சைக்குப் பதிலாக வயிற்றில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கினால் அனிஷா ராய் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை மறைக்க முயன்ற மருத்துவமனை ஊழியர்கள், அனிஷாவை உடனடியாக லக்னோவிற்கு கொண்டு செல்லுமாறு அவரது கணவரிடம் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அனிஷாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜோத்ஸ்னா சிங், அபூர்வா சிங், தீபக் சிங், சஞ்சய் சிங் மற்றும் ரோகன் குப்தா ஆகிய ஐந்து மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழப்புச் செய்தி அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அனில் குமார் மற்றும் கூடுதல் எஸ்பி கிருபா சங்கர் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ‘உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

Tags : UP. Ballia ,Ballia, Uttar Pradesh ,Devkali, Uttar Pradesh… ,
× RELATED திருமலை திருப்பதி தேவஸ்தானம் அலுவலகம் அருகே ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா