×

பாஜகவின் டிஜிட்டல் சதிவலைகளை முறியடிக்க 1.5 லட்சம் வாட்ஸ்அப் குரூப் மூலம் திரிணாமுல் ‘அட்டாக்’ மேற்குவங்க தேர்தல் களத்தில் சமூக வலைதளம் ஆதிக்கம்

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் சமூக வலைதளப் பிரச்சாரத்தை முறியடிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்டமான டிஜிட்டல் வியூகத்தை வகுத்துள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு ‘திதிர் தூத்’ என்ற பிரத்யேக செயலியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலி 18 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, கட்சித் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் சமூக வலைதள இயந்திரத்தை எதிர்கொள்ள ‘டிஜிட்டல் போர்’ ஒன்றை திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெரும் வகையில் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டமைப்பை அக்கட்சி உருவாக்கியுள்ளது. இதன் முக்கிய அங்கமாக 1.5 லட்சம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை இணைத்துள்ளனர்.

இதன் மூலம் கட்சியின் செய்திகள் அதிவேகமாக மக்களிடம் சென்றடைகிறது. இது தவிர, ‘அமி பங்களார் டிஜிட்டல் ஜோதா’ என்ற பெயரில் 1.6 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்ட டிஜிட்டல் படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். தினமும் 10,000க்கும் மேற்பட்ட ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்கள் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் பேச்சுகள் மற்றும் அரசு நலத்திட்டங்களின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.

இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூறுகையில், ‘மேற்குவங்கத்தின் பெருமைக்கும், வேறுமாநில ஆட்களின் ஆதிக்கத்திற்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தலை மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக 5,000க்கும் மேற்பட்ட சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர்கள் மூலம் அதிநவீன ஸ்டுடியோக்களை பயன்படுத்தி பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு சில நிமிடங்களிலேயே பதிலடி கொடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர். இந்த திட்டம் மூலம் கிராமப்புற மற்றும் இளைஞர்களின் வாக்குகளைக் கவர திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. லேப்டாப் மற்றும் செல்போன் மூலமாகவே பாஜகவின் பொய் பிரசாரங்களை தவிடுபொடியாக்குவோம் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* அரசியலை விட்டே விலக தயார்

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை ‘நிர்மம்’ (இரக்கமற்றது) என்றும், அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை மேற்குவங்க அரசு தடுத்து நிறுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார். குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதமர் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களை முடக்குவதாக அவர் சாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், தங்கள் ஆட்சி ‘மானோபிக்’ (மனிதாபிமானமிக்கது) என்று கூறியுள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு, மேற்குவங்கத்தில் உள்ள ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்காவது ஒன்றிய அரசு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.

இதுதொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு முதல் மேற்குவங்கத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று சவால் விடுத்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விட தங்களது ‘சுவஸ்திய’ திட்டம் 8.51 கோடி பேருக்கு பயன் அளித்துள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான 24,275 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடு கிடைப்பதை ஒன்றிய அரசு தடுத்துள்ளது’ என்று கூறினார்.

Tags : Trinamool ,WhatsApp ,BJP ,West Bengal ,Kolkata ,Trinamool Congress ,West Bengal assembly elections ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79...