நெல்லை: நெல்லையில் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் நடந்து வந்ததால் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி என்றாலே உலகப் புகழ்பெற்ற ‘இருட்டுக்கடை’ அல்வாவிற்கு அடுத்தபடியாக அனைவரது நினைவிற்கும் வருவது நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ நிறுவனம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வெளியூர் பயணிகளால் களைகட்டும் இந்த நிறுவனத்தில், தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அல்வா தயாரிப்புப் பணி தற்காலிகமாக முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த இக்கட்டான நிலை குறித்து சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அவரது பேட்டியின்படி, கடந்த சில நாட்களாகவே வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதில் கடும் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று மதிய நேரத்துடன் கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதால், வேறு வழியின்றி அல்வா விற்பனையை மதியத்திற்கு மேல் நிறுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒரு முன்னணி இனிப்பு நிறுவனம் இத்தகைய தட்டுப்பாட்டைச் சந்திப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், தங்களது வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகளையும் நிறுவனம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பழங்கால முறைப்படி விறகு அடுப்புகளைப் பயன்படுத்தி அல்வா தயாரிக்கும் பணிகளைத் தொடங்கவும், அதற்கான உள்கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
