×

திருப்பூர் வடக்கு, தெற்கில் கேம் சேஞ்சர்களாகும் புலம்பெயர் வாக்காளர்கள்

 

திருப்பூர் மாவட்டத்தின் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தித் துறையில் சுமார் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பூரிலேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த முறை எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிகளின்போது தங்களை தமிழக வாக்காளர்களாகவே இணைத்துக்கொண்டனர். அதனடிப்படையில் சுமார் 30 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பேர் திருப்பூரின் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இவர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு சிறு வாக்கு வங்கியாக இவர்கள் மாறியுள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள், எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிகளின் போது சொந்த ஊர்களுக்கு செல்லாததால் அங்கு வாக்குரிமை நீக்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் வாக்காளர்களாக இணைந்து கொண்டனர். இதனால் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் இவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

கடந்த தேர்தல்களில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட இவர்களின் வாக்கு எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் அதிகமாக இருப்பதால், அரசியல் கட்சிகளின் கவனமும் தற்போது இவர்களின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாகத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகள், வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தின. குறிப்பாக, இவர்களின் அடிப்படை உரிமைகளான முறையான ஊதியம், பணி பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. தொழிற்சங்கங்களின் இந்த நகர்வுகள், புலம்பெயர் தொழிலாளர்களை வெறும் வேலை ஆட்களாக மட்டும் பார்க்காமல் ஒரு அரசியல் அடையாளமாக நிலை நிறுத்தியுள்ளன. எண்ணிக்கையில் குறைவாகத் தெரிந்தாலும், ஒரு கேம் சேஞ்சராக உருவெடுத்துள்ள இவர்களின் ஆதரவைப் பெறவும் அரசியல் கட்சிகள் வீயுகங்கள் அமைத்து வருகின்றனர். வட மாநிலங்களில் தேசிய கட்சிகளின் ஆட்சியில் எந்த மாற்றத்தையும் பாராது, வாழ்வாதாரத்திற்காக தமிழகம் வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இங்குள்ள மாநில மற்றும் திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி, மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவைகளால் ஈர்க்கப்பட்டு தங்கள் பங்களிப்பை வாக்குகள் மூலம் அளிக்கவும் தயாராகி வருகின்றனர்.

 

Tags : Tiruppur North ,South ,Tiruppur district ,Bihar ,Jharkhand ,Odisha ,Uttar Pradesh ,West Bengal… ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5...